1968ல் ஊன்றிய தாய் விதை

மாங்கனி மணக்கும் சேலம் மாவட்டத்தில் இன்று நடக்கிறது திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு. பிரமிப்பூட்டும் வகையில் இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்றிருப்பது அரசியல் அரங்கில் கவனம் ஈர்த்து நிற்கிறது. இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஓர் அரசியல் இயக்கம், தனக்கான இளைஞர் அணியை தோற்றுவித்தது என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம்தான். தற்போதைய தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 1968ம் ஆண்டு சென்னை கோபாலபுரத்தில் ஒரு முடிதிருத்தம் செய்யும் நிலையத்தில் நண்பர்களை திரட்டி உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நட்பு வட்டாரம் ஒரு கட்டத்தில் ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க’ என்ற பெயரில் உருமாற்றம் கண்டது. இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாற்றங்காலாக விளங்கும் இளைஞர் அணியின் தாய்விதை. 1980ம் ஆண்டு மதுரை ‘ஜான்சி ராணி பூங்கா’வில் நடந்த பிரமாண்ட மாநாட்டில், தி.மு.க. இளைஞர் அணியை முறைப்படி தொடங்கி வைத்தார் அப்போதைய திமுக தலைவர் கலைஞர்.

தொடர்ந்து, 1982ம் ஆண்டு திருச்சியில் நடந்த இரண்டாம் ஆண்டு விழாவில், இளைஞர் அணியின் மாநில அமைப்பாளராக கலைஞரால் அறிவிக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முழுவதும் பம்பரமாய் சுற்றிச்சுழன்ற அவரது உழைப்பும் பங்களிப்பும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இப்படிப்பட்ட ஒப்பற்ற அர்ப்பணிப்பு என்பதே அவரை இளைஞர் அணியின் செயலாளர் எனும் பொறுப்பில் அமர்த்தியது என்றால் அது மிகையல்ல. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.கழகத்தின்பால் பற்றும் கொள்கைப்பிடிப்பும் மிக்க இளைஞர்களை மிகச்சரியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு பணிப்பொறுப்புகளை வழங்கி மேலும் இயக்கத்தை வலுப்படுத்தினார். இதை தொடர்ந்து, மூன்று பத்தாண்டுகள் இளைஞர் அணியின் செயலாளராக பொறுப்பு வகித்து கொள்கையின் அடிப்படையில் செயல் திட்டங்களை நிறைவேற்றி ஊக்கமூட்டினார். இதேபோல் திமுக இளைஞரணி நடத்திய போராட்டங்களும், பேரணிகளும், மாநாடுகளும் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் உற்சாகம் பரப்பியது. இதேபோல் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் இளைஞர் அணியின் பங்களிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவரானதும் இளைஞரணி பொறுப்பு அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து 2019ம் ஆண்டு ஜூலை மாதம் திமுக இளைஞர் அணிச் செயலாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். தற்போது மூன்றாம் தலைமுறை இளைஞர்கள் சாரைசாரையாக இளைஞர் அணியில் இணைத்துக்கொள்வதற்கு அவரது பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்படிப்பட்ட சூழலில் திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் இன்று நடக்கிறது. ‘மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்’ என்பது இந்த மாநாட்டின் இலக்காக உள்ளது. மாநில சுயாட்சி முழக்கம், சமூகநீதியை ஆதாரமாக கொண்ட திட்டங்கள், ஏழை எளியோரின் வாழ்வை மேம்படுத்தும் தொலைநோக்கு என்று அரசின் சாதனை சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக ஒரு கூட்டம் முழங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மதம் சார்ந்த அரசியலை திணிப்பதே அவர்களின் ஒரே நோக்கமாக உள்ளது. இதற்கு முடிவுரை எழுதி, சமூகநீதியில் புதிய சரித்திரம் எழுதுவதற்கு இந்த இளைஞரணி மாநாடு வழிவகுக்கும். அதுவே மாநில உரிமைகளை மீட்டெடுக்க வழிவகுக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Related posts

உங்களை தேடி உங்கள் ஊரில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கலெக்டர் நேரில் ஆய்வு

ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி