ஜீவா மேம்பாலத்தின் கீழ் 4 அடிக்கு மழைநீர் தேக்கம் அமைச்சர் பார்வையிட்டார்

சென்னையில் பெய்த பலத்த மழையால் வியாசர்பாடி கணேசபுரம் ஜீவா மேம்பாலம் கீழ் பகுதியில் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பெரம்பூர் மற்றும் பேசின் பிரிட்ஜ் வழியாக வாகன ஓட்டிகள் சுற்றிச் செல்கின்றனர். தற்போது அந்த இடத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த வழி ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் செல்கின்றன. தற்போது இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தடுப்புகள் வைக்கப்பட்டது. இதன் காரணமாக கொடுங்கையூர், வியாசர்பாடி செல்லும் பொதுமக்கள் பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் வழியாகச் செல்கின்றனர். மற்ற வாகனங்கள் பேசின்பிரிட்ஜ் வழியாக வியாசர்பாடி மேம்பாலம் சென்று அங்கிருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள் மின்மோட்டார் மூலம் மேம்பாலத்தின் கீழ் உள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இப்பணிகளை நேற்று அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டார். மழைநீரில் மூழ்கிய சுரங்கப்பாதைகள்: சென்னையில் பெய்த கன மழையால் கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்க சுரங்கப் பாதை, பழவந்தாங்கல் சுரங்கப் பாதை போன்றவை நீரில் மூழ்கின. பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கார் ஒன்று சிக்கிக்கொண்டது. அதேபோல் ஆலந்தூர், மீனம்பாக்கம் பகுதியில் உள்ளி ஜி.எஸ்.டி சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர் போன்ற பகுதியில் உள்ள மரங்கள் கன மழையால் சாய்ந்தன. குறிப்பாக நங்கநல்லூர் 5வது பிரதான சாலையில் உள்ள பழமையான மரம் சாய்ந்ததில் 2 பைக்குகள் நாசமானது. ஆலந்தூர், மாதவபுரம், ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர், மடுவின்கரை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்