தலையெடுக்கும் பணநாயகம்

தமிழ்நாட்டில் தேர்தல்கள் தோறும் வெளிப்படும் பணநாயகம் மீண்டும் இப்போது அப்பட்டமாக வெளிக்காட்ட தொடங்கியது. இதன் பின்னணியில் பாஜவின் பங்களிப்பு இருப்பது கண்கூடாக தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு உருப்படியாக ஒரு திட்டத்தையும் தராத பாஜ அரசுக்கு, இம்முறை வடமாநிலங்கள் கூட கை கொடுப்பதாக இல்லை. தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகள் வடமாநிலங்களில் இந்தியா கூட்டணி முன்னேறி செல்வதை உறுதிப்படுத்துகின்றன.

எனவே தென்மாநிலங்களில் தங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை எப்படியாவது பணத்தை கொட்டி தூண்டில் போட்டு இழுப்பது என்கிற முடிவுக்கு பாஜ வந்துவிட்டது. அதற்காக சில தொகுதிகளை குறி வைத்து பணத்தை கொட்டி இறைக்கவும் தயாராகிவிட்டது. தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் நிலையில், மக்கள் மன்றத்தில் பாஜவின் பாசாங்கு யுக்திகள் எடுபடவில்லை. வாக்காளர்கள் கையில் கடைசி கட்டத்தில் பணம் மற்றும் பரிசு பொருட்களை திணித்தாவது வெற்றியை ஈட்ட பாஜ கூட்டணி எத்தனிக்கிறது.

இதற்காக ஒன்றிய அரசின் ஏவல்துறைகளாக செயல்படும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்டவை பாஜவிற்கு எதிரே களத்தில் நிற்கும் வலுவான வேட்பாளர்களை குறி வைத்து செயல்படுகின்றன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகளின் கண்ணில் மண்ணை தூவி விட்டு பாஜவினர், வாக்காளர்கள் மத்தியில் பணத்தை வாரியிறைக்க முயன்று வருகின்றனர். அதை முறியடிக்க அதிகாரிகளும் இப்போது துணிச்சலாக கண்கொத்தி பாம்பாக செயல்பட தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் தற்போது சென்னையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ஏசி பெட்டியில் பயணித்த 3 பேரிடம் ரூ.4 கோடி சிக்கியுள்ளது. இப்பணம் நெல்லை தொகுதியில் பாஜ வெற்றிக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என்பது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து நெல்லை தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல், உதவியாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி நெல்லையில் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் நடந்த சோதனையில் பரிசு பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பாஜ தங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளாக நினைத்து கொண்டிருக்கும் கோவை, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி உள்ளிட்ட சில தொகுதிகளை குறித்து பாஜ பணத்தையும், பரிசு பொருட்களையும் இறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை முன்கூட்டியே தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் பொதுதேர்தல்களில் முன்பெல்லாம் கடைசி இரு தினங்கள் மட்டுமே வாக்காளர்கள் மத்தியில் பணம் பட்டுவாடா செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் பாஜ கூட்டணி கட்சியினர் அந்த உத்தியை மாற்றி அமைத்து, 10 தினங்களுக்கு முன்னரே கிராமங்கள் தோறும் சென்று அவர்களுக்கு தேவையான கவனிப்புகளை செய்ய தொடங்கியுள்ளனர். மக்களவை தேர்தல் களத்தில் கோடிக்கணக்கில் பணம் புரள்வதை பார்க்கும்போது, இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது என்கிற கேள்வி சாமானியனுக்கும் எழுகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து கூட பணத்தை கொண்டு வந்து கொங்கு மண்டல தொகுதிகளில் கொட்டி வருவதாக வரும் புகார்களை மறுப்பதற்கில்லை. இத்தேர்தலில் வெற்றி ஒன்றே குறிக்கோள் என்பதை தாரக மந்திரமாக கொண்டுள்ள பாஜ, அதற்காக ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்ற முயல்கிறது. வாக்காளர்கள் இந்த நேரத்தில் விழித்து கொண்டால் மட்டுமே, ஜனநாயகம் மீண்டும் மலரும்.

Related posts

மீண்டும் ஒரு கேலிக்கூத்து

தமிழ்நாட்டில் 4 விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிப்பு

தினம், தினம் புதிய உச்சம் கண்ட நிலையில் தங்கம் விலை சற்று குறைந்தது