Saturday, October 5, 2024
Home » தி மார் வெல் ஸ்!

தி மார் வெல் ஸ்!

by Porselvi

மார்வெல் உலகிலிருந்து முழுக்க முழுக்க பெண்களால் பெண்களைக் கொண்டு உலகைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோயின்கள் படமான ‘திமார்வெல்ஸ்‘ தீபாவளி சிறப்பாக வெளியாகியிருக்கிறது. மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ், மற்றும் மோஷன் பிக்சர்ஸ் வெளியீட்டில் நியா டகோஸ்டா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் படப் பட்டியலில் அடுத்த வரவு ‘தி மார்வெல்ஸ்’ . பிரி லார்சன், தியோனா பாரீஸ், இமான் வெல்லானி, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சூப்பர் ஹீரோயின்கள் அடிப்
படையிலான மார்வெல் திரைப்படம்.

சுப்ரீம் இன்டலிஜென்ஸ் குழப்பத்தால் ஹாலா உலகில் காற்று, நீர், சூரிய ஒளி என அனைத்தும் நீங்கி இருள் சூழ்ந்த உலகமாக மாறிநிற்கிறது. ஹாலாவின் புதிய தலைவராக பொறுப்பேற்கும் டார் – பென் தனது உயிரையே பணயம் வைத்து தனது உலகத்திற்கான வாழ்வைக் கொண்டுவர முயற்சிசெய்கிறார். அந்த முயற்சிக்கு உதவியாக குவாண்டம் பேண்ட் இருக்கிறது. அதில் ஒரு பகுதி டார் பென்னிடமும், மற்றொரு பாதி பூமியில் இருக்கும் மிஸ் மார்வெல் கமலா கானிடமும் இருக்கிறது. முழுமையாக ஹாலா உலகத்திற்கு அத்தனை வசதியையும் கொண்டு வர இரண்டு பேண்டுகளும் ஒன்றுசேர வேண்டும். அப்படிச் செய்தால் மொத்த அண்டத்திலும் பிளவு உண்டாகி, போர் மூளும்.

இந்த செயல்பாடுகளின் ஒரு கட்டமாக ஒளி அடிப்படையிலான சக்திகள் கொண்ட கேப்டன் மார்வெல் (பிரிலார்சன்), மிஸ் மார்வெல் ( இமான் வெல்லாணி), மோனிகா ரெம்பியூ (தியோனா பாரீஸ் ) மூவரின் சக்திகளும் அவர்களை இடத்திற்கு இடம் மாற்றுகின்றன. இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு பென்னால் மொத்த அண்டத்திற்கும் ஏற்படவிருக்கும் ஆபத்து சரி செய்யப்பட்டு போர் நிறுத்தப்பட்டதா இல்லையா என்பது மீதிக்கதை.

இந்த வருடம் முழுக்கவே இந்தியப் படங்களில் பெண்களுக்கான ஆக்‌ஷன் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.‘பதான்’ தீபிகா படுகோனே, ‘ஜவான்’ நயன்தாரா, ‘லியோ’ மடோனா செபஸ்டியன், ‘தி ரோட்’ த்ரிஷா, ‘டைகர் 3′ காத்ரீனா கைஃப், சொல்லிக்கொண்டே போகலாம். இந்திய சினிமாக்களே ஹீரோயின்கள் ஆக்‌ஷன்களில் ஆர்வம் காட்டுகையில் ஹாலிவுட் சளைத்தவர்களா என்ன. இதோ மார்வெல் தனது முன்னணி பெண் சூப்பர் ஸ்டார்களைக் களமிறக்கி முழுமையான சூப்பர் ஹீரோயின்கள் படத்தைக் கொடுத்திருக்கிறது. சூப்பர் ஹீரோக்கள் என்றாலே ஆண்கள் மட்டும் தானா முழுமையான பெண்களுக்கான படமாக இருக்கக்கூடாதா என்னும் நோக்கத்திலேயே இந்த மார்வெல் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் டகோஸ்டா. படத்தின் ஹீரோயின்கள் வில்லி என அத்தனையும் பெண்கள் மயமாக இருக்கிறது. படத்திற்கு இசையும் லாரா கர்ப்மன் என்னும் பெண் இசையமைப்பாளர்தான். யார் இந்த நியா டகோஸ்டா?!

அமெரிக்க இயக்குநர், மற்றும் திரைக்கதை ஆசிரியர். டகோஸ்டா நவம்பர் 8, 1989 இல் புரூக்ளினில் பிறந்தவர் மற்றும் ஹார்லெமில் வளர்ந்தவர். சிறுவயது முதலே கவிஞராக வேண்டும் என்பதே டகோஸ்டாவின் கனவாக இருந்தது. டகோஸ்டாவுக்கு 16 வயதாக இருந்தபோது, ​​அவர் A.P. ஆங்கில வகுப்பை எடுத்துப் படித்திருக்கிறார். அங்கு அவர் ஜோசப் கான்ராட் எழுதிய ‘ஹார்ட் ஆஃப் டார்க்னஸ்’ புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றார். தொடர்ந்து அபோகாலிப்ஸ்’ நவ் திரைப்படத்தைப் பார்த்த பிறகு டகோஸ்டா சினிமா இயக்கத்தின் மீது அவருக்கு ஆர்வம் உண்டானது. நியூ ஹாலிவுட் எரா இன்ஸ்டிடியூட்டில் இணைந்து சினிமாவை முறைப்படி கற்றார் டகோஸ்டா. பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலா, சிட்னி லுமெட், மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்ற இயக்குனர்களின் படங்கள், திறமைகள் என அவர்கள் பால் ஈர்க்கப்பட்டார் டகோஸ்டா. நியூயார்க் பல்கலைக்கழக டிஷ்க் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் சேர்ந்து அங்கு, தொலைக்காட்சி தயாரிப்பு உதவியாளராகப் பணிபுரியும் போது ஸ்கோர்செஸியை சந்தித்தவர் அவரது திறமையாலும் கவரப்பட்டார்.

தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், தொடர்ந்து பல பிரபல இயக்குநர்களுடன் வேலை செய்துவந்தார். அவருக்கு ‘லிட்டில் வுட்ஸ்’ மற்றும் ‘கேண்டி மேன்’ படங்கள் இயக்குநராகும் வாய்ப்பைப் பெற்றுத் தர தொடர்ந்து ‘தி மார்வேல்ஸ்’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் அள்ளிக் கொடுத்தது. இதன் காரணத்தால் மார்வெல் படங்களை இயக்கிய மிகக் குறைந்த வயது மார்வெல் பட பெண் இயக்குநர் மற்றும் முதல் ஆப்பிரிக்க -அமெரிக்க மார்வெல் பெண் இயக்குநராகவும் மாறியிருக்கிறார். உலக அளவில் 109 மில்லியன்கள் வருமானம் ஈட்டி தற்போது ‘தி மார்வெல்ஸ்’ படம் மாஸ் காட்டிக்கொண்டிருக்கிறது.
– ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

four × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi