போலீசிடமிருந்து தப்ப பாலத்தில் இருந்து குதித்த ரவுடி கால் முறிந்தது: திருத்துறைப்பூண்டி அருகே பரபரப்பு


திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த சிங்களாந்தி ரோடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுஜிலி (எ) சாம்ராஜ் (28). அடிதடி, கஞ்சா விற்பனை, பொது சொத்தை சேதப்படுத்துதல் போன்ற குற்றத்திற்காக பலமுறை சிறைக்கு சென்று வந்துள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருத்துறைப்பூண்டி காவல் நிலைய ரவுடி லிஸ்டில் இவரது பெயரும் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கஞ்சா விற்றதாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிந்த சாம்ராஜ், ஜாமீன் பெற்று கடந்த மாதம் வெளியே வந்தார். இந்நிலையில் சாம்ராஜ் மற்றும் அவரது கூட்டாளியான நாகை மாவட்டம் பேச்சுகாடு களையாஞ்சேரியை சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு திருத்துறைப்பூண்டி மருத்துவமனை சாலையில் உள்ள உரக்கடையில் பூச்சி மருந்து வாங்குவதுபோல் நடித்து பாமனியை சேர்ந்த உரிமையாளர் சரவணபவன் (53) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டினர்.

பின்னர் கடையில் இருந்த ரூ.65,000 ரொக்கம் மற்றும் ரூ.18,000 மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து சரவணபவன் அளித்த புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். 2 பேரையும் பிடிப்பதற்காக போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்களாந்தி பாலம் அருகில் நின்று கொண்டிருந்த சாம்ராஜ், போலீசாரை பார்த்ததும் பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்பியோட முயன்றார். அப்போது அவரது இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து கைது செய்ததுடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.12 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவான அஜித்குமாரை தேடி வருகின்றனர்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்