போலி பேராசிரியர்கள் விவகாரம்; நிரந்தர தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி

சென்னை: ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றியதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்த பேராசிரியர்கள், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்ற முடியாத வகையில் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான கருத்தரங்கு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவம் படிக்கும் மாணவ மாணவியர் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக் கழக துணைவந்தர் வேல்ராஜ் பங்கேற்று பேசியதாவது: அண்ணா பல்கலைக் கழகத்தில் பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமெண்ட்டேஷன் துறை செயல்பட்டு வருகிறது.

குறைந்த செலவிலான உபகரணங்கள் தயாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் பிரச்னைகள் குறித்து நிறைய தகவல்களை சேகரித்து, செயற்கை நுண்ணறிவு மூலமாக ஆய்வுக்கு உட்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் ஆகியவை ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைவு பெற்றுள்ள 295 பொறியியல் கல்லூரிகளில் சில ஆசிரியர்கள் தவறான தகவல்களை கொடுத்துள்ளதாக தனியார் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்தால் மட்டுமே இனிமேல் தவறுகள் நடக்காமல் தடுக்கப்படும். இதுகுறித்து ஆளுநரை நேரில் சந்தித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம். உயர்கல்வித் துறையும் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

ஒரு ஆசிரியர் இரண்டு கல்லூரிகளில் பணியாற்றியதாக தகவல் வந்துள்ளது. இது கல்லூரி மீது தவறா, அல்லது ஆசிரியர் மீது தவறா என்று விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே தவறு செய்த கல்லூரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்த ஆசிரியர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் பணியாற்றுவதில் இருந்து நிரந்தர தடை செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.

Related posts

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என ஆளுநர் கூறியதற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1556 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல்