இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயம்: போலீசில் புகார்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகுவின் அடையாள அட்டை மாயமானது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்திய பிரத சாகு ஐஏஎஸ் பணியாற்றி வருகிறார். இவருக்கு சென்னை தலைமை செயலகத்தில் அலுவலகம் உள்ளது. சத்திய பிரத சாகுவுக்கு ஒன்றிய தேர்தல் ஆணையத்தால் ‘தமிழக தேர்தல் அதிகாரி’ என ஒன்றிய அரசு முத்திரையுடன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையை ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் ஜனவரி மாதம் புதுப்பிப்பது வழக்கம். அதன்படி தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிப்பதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப, அவரது உதவியாளர் சரவணனிடம் தபால் மூலம் அனுப்பி வைக்க கொடுத்துள்ளார்.

அதன்படி உதவியாளர் சரவணன் டெல்லிக்கு அடையாள அட்டையை அனுப்ப தபால் நிலையம் எடுத்து செல்லும் போது, திடீரென அடையாள அட்டை மாயமானது. பல இடங்களில் தேடியும் அடையாள அட்டையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகுவின் உதவியாளர் சரவணண்(44) மாயமான அடையாள அட்டையை கண்டுபிடித்து தரும்படி கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 29ம் தேதி புகார் அளித்தார். அதன்படி போலீசார் சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுபவருக்கு ரூ.11லட்சம் : சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை கருத்து

6 போலீசார் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் வெளி விவகாரம் உள்பட 4 நிலைக்குழுக்களின் தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்கும்