எண்ணமெல்லாம் இங்கேதான்

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு அயலக தமிழர்களையும், முக்கிய முதலீட்டாளர்களையும் சந்தித்து தமிழ்நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சென்னை மற்றும் கோவையில் மின்னணு உற்பத்தி மையம் நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம், அமெரிக்காவில் உள்ள உலகளாவிய நிறுவனங்களுடன் பல ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் என நாள்தோறும் தொழில்நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை போட்டு, தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.

தொழில் முதலீடுகள், முதலீட்டாளர்கள் சந்திப்புகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என தொடர்ச்சியான பணிகளுக்கு மத்தியிலும், அமெரிக்காவில் இருந்து கொண்டே அரசு பணிகளையும் இ- ஆபீஸ் வழியே மக்கள் முதல்வர் மேற்கொள்வதுதான் சிறப்பாகும். பொதுவாக அரசு அலுவலகங்களில் ஒரு அதிகாரி ஒரு வாரம் விடுப்பில் சென்றுவிட்டாலே, அலுவலக கோப்புகள் அப்படியே தேங்க ஆரம்பித்து விடும். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் முதல்வருக்கோ, தமிழ்நாட்டு மக்கள் மீதே சிந்தனை இருப்பதால், இ-ஆபீஸ் நடைமுறையில் இரவு நேரங்களில் தமிழக அரசின் கோப்புகளை தினமும் பார்வையிட்டு, கையெழுத்து இட்டு வருகிறார்.

அயலக மண்ணில் இருந்தாலும் அரசு கோப்புகள் தமிழ்நாட்டில் தேங்கி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், அங்கிருந்து கொண்டே இ.ஆபிஸ் வழியே மக்கள் பணியை முதல்வர் ஆற்றி வருகிறார். இது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் அன்றைய தினமே கண்காணித்து, அதற்கான தீர்வுகளை இரவே அதிகாரிகளுடன் கலந்து பேசி தெரிவித்து வருகிறார். சென்னை அசோக்நகர் மேல்நிலைப் பள்ளியில் மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு பேசியதால் சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு, பள்ளி நிகழ்ச்சிகளுக்கான புதிய வழிகாட்டி வழிமுறைகளை வெளியிட்டார். மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனைகள் அவசியம் என அதில் தெரிவித்திருப்பதோடு, தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்த வாழ்வு, சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள் மட்டுமே மாணவர்கள் மத்தியில் விதைக்கப்பட வேண்டும் என அந்த உத்தரவில் அறுதியிட்டு கூறியுள்ளார்.

பொதுவாக தனி மனிதர் தொடங்கி, அரசு அதிகாரிகள், குழுக்கள் என பெரும்பாலானோரின் வெளிநாட்டு பயணங்களில், பல இடங்களை ஜாலியாக சுற்றி பார்த்திடும் எண்ணமே மேலோங்கி நிற்கும். வெளிநாடுகளில் உள்ள சுற்றுலா தலங்கள், ஏரிகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், கடற்கரைகள், தீவுகள் அவற்றை சுற்றி பார்த்து விட்டு, பொழுதுபோக்குவதாகவே அமையும். ஆனால் மக்கள் முதல்வரான மு.க.ஸ்டாலினின் அயலக பயணத்தில் எப்போதுமே தமிழ்நாடுமக்கள் பற்றிய எண்ணங்களே ஓடிக் கொண்டிருக்கிறது. முதலீடுகளை ஈர்ப்பது ஒருபுறம், தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை நாள்தோறும் கண்காணிப்பது மறுபுறமாக இருக்கிறது.

தமிழகத்திற்கு என்னென்ன புதிய திட்டங்கள் தேவை என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப அமெரிக்காவில் உள்ள தொழில் நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து பேசி ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார். புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேசி, அவர்களது கவனத்தையும் முதல்வர் ஈர்க்க தவறவில்லை. ‘அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும். பார்வை கண்காணிக்கும்’ என அமெரிக்கா செல்லும் முன்பு முதல்வர் முன்மொழிந்த வார்த்தைகளை அப்படியே சிரமேற்கொண்டு நிறைவேற்றி வருகிறார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது