இதுவே எதிர்பார்ப்பு

இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்திருவிழா என்று கொண்டாடப்படும் 18வது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி இடையே போட்டி பிரதானமாக இருந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது 400 தொகுதிகளை பாஜ கைப்பற்றும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பாஜ தலைவர்கள் கூறி வந்தனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் வருங்காலத்தில் நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் மட்டுமே இருக்கும் என்றும் எள்ளி நகையாடினர்.

இந்தநிலையில் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293ல் வெற்றி பெற்றது. பாஜவுக்கு மட்டும் 240 இடங்கள் கிடைத்துள்ளது. இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்குரிய 273 தொகுதிகள் பாஜவுக்கு கிடைக்கவில்லை. இதனால் ஆந்திராவில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி, பீகாரில் வெற்றி பெற்ற நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது பாஜ.

தொடர்ந்து 3வது முறையாக இன்று பிரதமர் பதவியை ஏற்கிறார் நரேந்திரமோடி. உலக நாடுகளின் தலைவர்களும், இந்திய மாநிலங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பிரதமருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் ஒரு புறம் இருந்தாலும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஆட்சியாக இது தொடர வேண்டும் என்பது தேசத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. தனிப்பெரும்பான்மை என்ற அங்கீகாரத்தை பாஜவுக்கு மக்கள் கொடுக்கவில்லை. அதனால் கடிவாளம் இப்போது தெலுங்குதேசத்திடமும், ஐக்கிய ஜனதா தளத்திடமும் உள்ளது.

மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வழங்கிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்துவேன். கூட்டணி கட்சி தலைவர்களின் கருத்துக்கும் செவிமடுத்து, அனைவரும் ஒற்றுமையுடன் நாட்டை வழிநடத்துவோம் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். புதிய ஆட்சி என்பது ‘‘மாநிலங்களின் ஆசைகள் மற்றும் தேசிய நலன்களை சமநிலைப்படுத்துவது, சமூகத்தின் அனைத்து அடுக்குகளுக்கும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் இயங்கவேண்டும்,’’ என்று கூட்டணி தலைவரான சந்திரபாபு நாயுடு விருப்பம் தெரிவித்துள்ளார்.

தேசம் மட்டுமல்ல, மாநிலங்களும் முக்கியம் என்பதை அவர் கோடிட்டு காட்டியுள்ளார். இந்த வகையில் தமிழ்நிலம் எதிர்நோக்கும் நீட் போன்ற பிரச்னைகளுக்கும் வரப்போகும் ஆட்சி உரிய தீர்வை தரவேண்டும். கூட்டணி ஆட்சி என்பதும் ஜனநாயகம் தழைப்பதற்கான ஒரு புதிய விதைதான். இந்த விதையின் வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். குறிப்பாக ஜாதி, மதம், இனம், மொழி பாகுபாடு பார்க்காத பரந்த நோக்கம் நிறைந்த நல்லாட்சியாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் தேசியஜனநாயக கூட்டணி பயணிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் கோடிக்கணக்கான இந்திய மக்கள்.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்