சாட்சி அளிப்பவரின் சாதி, மதம் பதிவு செய்வதை எதிர்த்து வழக்கு: சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் பதிலளிக்க உத்தரவு


மதுரை: சாட்சிகளின் சாதி, மதத்தை பதிவு செய்வதை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் தலைமை பதிவாளர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கோகுல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: விசாரணை நீதிமன்றங்களில் சாட்சியம் அளிப்பவரின் சாதி மற்றும் மதம் பதிவு செய்யப்படுகிறது. விசாரணை நீதிமன்றங்களில் இது ஒரு நடைமுறையாகவே பின்பற்றப்படுகிறது. இதனால் வழக்கை விசாரிக்கும் நீதிபதியும், வழக்கறிஞர்களும் சம்பந்தப்பட்ட நபரின் சாதி மற்றும் மதம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள முடிகிறது. சாட்சியம் அளிப்பவரின் சாதி மற்றும் மத அடையாளங்கள் இல்லாமலே வழக்கை கையாள முடியும். வழக்கு விசாரணைக்கும் சாதி மற்றும் மதத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை.

சாதி மற்றும் மத அடையாளத்தை சேகரிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது. ஆனால், இந்த நடைமுறை இன்னும் தொடர்கிறது. எனவே, விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறும்போது, அவர்களின் சாதி மற்றும் மதத்தை குறிப்பிட தேவையில்லை என உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், மனுவிற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், ஐகோர்ட் கிளை பதிவாளர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ. 4க்கு தள்ளி வைத்தனர்.

Related posts

பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த பாஜ நிர்வாகிகள் 6 பேர் கைது

பல மணி நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை; கைதிகளை பார்க்கணுமா? இனி அப்பாயின்ட்மென்ட் புழலை தொடர்ந்து அனைத்து சிறைகளிலும் விரைவில் அறிமுகம்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே அக்.1 முதல் சரக்கு தோணி இயக்கம்