தாக்குதலுக்கு ஆளான சரக்கு கப்பல் மும்பை வந்தது; மேற்கு கடற்கரையில் இருந்து ‘ட்ரோன்’ தாக்குதல் நடந்தது: முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள்


புதுடெல்லி: அரபிக்கடலில் தாக்குதலுக்கு ஆளான சரக்கு கப்பல் மும்பை வந்தது. அந்த கப்பலின் மீது மேற்கு கடற்கரையில் இருந்து ‘ட்ரோன்’ தாக்குதல் நடந்ததாகமுதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இஸ்ரேல் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஏமன் நாட்டின் ஹவுதி ஆயுதக் குழு, செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் அரபிக் கடலில் லைபீரிய நாட்டு எண்ணெய் கப்பல் ‘எம்வி கெம் புளூட்டோ’ கப்பல் மீது கடந்த சனிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடந்தது. ஈரானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இதேபோன்று, செங்கடலில் பயணித்த கபோன் நாட்டுக்குச் சொந்தமான ‘எம்.வி. சாய்பாபா’ சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுகுறித்து இந்திய கடற்படை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான மர்மகோவா, கொச்சி, கொல்கத்தா ஆகிய போர்க் கப்பல்கள் அரபிக் கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தொலைதூர கண்காணிப்புக்கு அதிநவீன பி-81 விமானத்தையும் இந்திய விமானப் படை ஈடுபட்டுத்தியது. இதனிடையே தாக்குதலுக்கு உள்ளான எம்வி கெம் புளூட்டோ சரக்கு கப்பல், ேநற்று மும்பை துறைமுகம் வந்தடைந்தது. அந்த கப்பலில் இருந்த 21 இந்திய பணியாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்திய கடற்படையின் வெடிகுண்டு நிபுணர் குழு அந்தக் கப்பலை ஆய்வு செய்து வருகிறது. முதற்கட்ட ஆய்வில், இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து ட்ரோன் மூலம் தாக்கப்பட்டது.

எங்கிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது? அதற்காக எவ்வளவு வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்து தடயவியல் ஆய்வுக்கு பிறகே தெரியவரும். அரபிக்கடலில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மூன்று ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் கப்பல்கள் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது’ என்று கூறின.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது