சேலத்தில் இருந்து வேலூர் மண்டிக்கு முன்பருவ மாங்காய் வரத்து தொடங்கியது: கிலோ ரூ140 வரை விற்பனை

வேலூர்: வேலூர் மண்டிக்கு முன்பருவ மாங்காய் சேலம் மாவட்டத்தில் இருந்து வரத்து தொடங்கி உள்ளதால் கிலோ ₹140 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் மா உற்பத்தியில் வேலூர் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுதோறும் கோடை விடுமுறை நாட்களில் மாம்பழம் சீசன் களைகட்டும். மாவட்டத்தில் அணைக்கட்டு, லத்தேரி, குடியாத்தம், காட்பாடி போன்ற பகுதிகளில் மாம்பழங்கள் விளைகின்றன. வழக்கமாக, ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே முன்பருவ ரக மாங்காய்கள் விற்பனைக்கு வந்துவிடும். இந்த ஆண்டு பருவ மழை போதுமான அளவு பெய்யவில்ைல. இதனால் கிணற்று பாசனம் மற்றும் போர்வெல் தண்ணீர் பாசனம் மூலம் மா சாகுபடி செய்துள்ள தோப்புகளில் விளைந்த முன்பருவ ரகமான செந்தூரா, பீத்தர், பங்கனப்பள்ளி, காலபாடி இமாம்பசந்த் போன்றவை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறுவடை செய்யப்படும்.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை காலத்தில் வழக்கமாக வீசும் காற்று பலமாக இருந்ததால் மாங்காய்கள் உதிர்ந்து, சேதமடைந்தது. இதனால் இந்தாண்டு மாங்காய் விளைச்சல் கடுமையாக பாதிப்பு அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் வேலூர் மாங்காய் மண்டிக்கு தற்போது குறிப்பிட்ட சில ரக மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இவை சேலம் மாவட்டம் வைகுண்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. செந்தூரா மாங்காய் கிலோ ரூ60 முதல் ரூ80க்கும், காலாபாடு ரூ100 முதல் ரூ120க்கும், பங்கனபள்ளி ரூ60 முதல் ரூ80க்கும், இமாம்பசந்த் ரூ120 முதல் 140க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது குறைந்த அளவில் மட்டுமே 2 டன் வரை மாங்காய் வரத்து உள்ளது.

கடந்த ஆண்டு மாங்காய் வரத்து இந்த காலக்கட்டத்தில் அதிகளவில் வந்தது. ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைந்துள்ளது. இன்னும் 2 மாதங்கள் பிறகுதான் உள்ளூர் மாங்காய்கள் வரத்து அதிகமாக இருக்கும். விலையும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்