உள் வெளி கடந்து நிற்கும் ஆதி நாயகி

பஞ்ச ப்ரஹ்மாஸந ஸ்திதா

நாம் இதற்கு முன்பு ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தாவில் தொடங்கி, ஸ்ரீ மந் நகரநாயிகா, சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா, இப்போது பஞ்ச ப்ரஹமாஸந ஸ்திதா என்று தொடர்ந்து பார்த்துக் கொண்டே வருகிறோம். ஒரு பரந்த பார்வையில் அம்பிகை வசிக்கக்கூடிய ஸுமேருவை பார்த்துவிட்டு, அப்படியே இன்னும் கொஞ்சம் நெருக்கத்தில் வரும்போது அந்த ஸ்ரீ நகரத்தை பார்த்துவிட்டு, அந்த ஸ்ரீ நகரத்திற்குள் இன்னும் நெருக்கமாக வந்து அம்பாள் வசிக்கக்கூடிய அந்த கிரஹம் – கிரகம் அல்ல (வானத்தில் உள்ள நவகிரகங்கள் அல்ல) அம்பாள் வசிக்கக்கூடிய இல்லமான சிந்தாமணியை பார்த்தோம்.

இப்போது அந்த சிந்தாமணி கிரஹத்திற்குள் வசிக்கக்கூடிய அந்த நான்கு வாயில்கள் மற்றும் அந்த நான்கு மூலை களிலும் என்னென்ன இருக்கிறது என்று பார்த்தோம். சிதக்னி குண்டம், அம்பிகையினுடைய ஸ்ரீ சக்ர ராஜ ரதம் இருக்கிறது. வாராஹியினுடைய கிரி சக்ரராஜ ரதம் இருக்கிறது. மாதங்கியினுடைய கேய சக்ர ராஜ ரதம் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்துவிட்டு சிந்தாமணியை குறித்த விளக்கங்களை பார்த்தோம். அந்த சிந்தாமணி க்ருஹம் (அம்பிகை வசிக்கும் வீடு) என்பது நம்முடைய ஹ்ருதயமாக இருக்கிறது.

இங்கு அஹம் ஸ்பூர்த்தியாக – தான் மட்டுமே இருக்கும் உயர்ந்த நிலையில் அம்பாள் இருக்கிறாள் என்று பார்த்தோம். இப்போது அந்த சிந்தாமணி க்ருஹத்திற்குள் பிரவேசம் செய்கிறோம். அப்படி உள்ளே பிரவேசம் செய்தால் அங்கு ஸ்ரீ சக்ராஹாரமான ஒரு பீடம் இருக்கிறது. ஸ்ரீ சக்ரமே பீடமாக இருக்கிறது. எப்படியெனில், ஒன்பது நிலைகளாக இருக்கின்றன. ஏனெனில், ஸ்ரீ சக்ரமே ஒன்பது ஆவரணங்கள். இந்த ஒன்பது ஆவரணங்களும் படிப்படியாக ஒன்றுமேல் ஒன்றாக படிப்படியாக இருக்கிறது. இப்படி ஒன்பது படிகளாக இருப்பதற்கு மேரு பிரஸ்தாரம் என்று பெயர். இந்த மேரு பிரஸ்தார பீடத்தில் அந்த பீடம் இருக்கிறது.

இப்படி ஒவ்வொரு ஆவரணமாக ஒவ்வொரு படியாகக் கிடந்து போகும்போது அதன்மேல் பிந்து ஸ்தானம் என்கிற ஒன்பதாவது படி நிலையில் அம்பாள் எழுந்தருளியிருக்கிறாள். அதற்கு முன்னால், அந்த ஆவரண தேவதைகள், அந்தந்த இடத்தில் இருக்கக்கூடிய யோகினிகளெல்லாம் இருக்கிறார்கள். நாம் அதில் இருக்கக் கூடிய தேவதைகள் என்றெல்லாம் சென்றால், கட்கமாலா ஸ்தோத்திரத்தில் அந்த நாமங்களெல்லாம் இருக்கிறது.
நாம் இந்த நாமத்திலுள்ள அம்பிகையினுடைய ஸ்தானத்தை சொல்வதற்கு முன்னால், அம்பாளுடைய ஸ்ரீ சக்ரஹரமான அம்பாளினுடைய பெயரை மட்டும் பார்க்கலாம். அந்தந்த ஆவரணங்களினுடைய பெயரைப் பார்த்துவிட்டு இந்த நாமாவினுடைய விளக்கத்திற்குச் செல்லலாம்.

இந்த ஸ்ரீ சக்ரத்திலுள்ள முதல் ஆவரணம், முதல் சக்ரத்திற்கு த்ரைலோக்ய மோஹன சக்ரம் என்று பெயர். இரண்டாவது ஆவரணமாக இருக்கக் கூடிய சக்ரத்திற்கு சர்வாஸா பரிபூரஹச் சக்ரம் என்று பெயர். மூன்றாவதாக உள்ளதற்கு சர்வ சம்சோபன சக்ரம் என்று பெயர். நான்காவதாக இருப்பதற்கு சர்வ தாயக சக்ரம் என்று பெயர். ஐந்தாவதாக இருப்பதற்கு சர்வார்த்த சாதக சக்ரம் என்று பெயர். ஆறாவதாக இருப்பதற்கு சர்வ ரட்சாக சக்ரம் என்று பெயர். ஏழாவதாக அமைந்துள்ள சக்ரத்திற்கு சர்வ ரோபஹர சக்ரம். எட்டாவது சர்வ சித்திப் பிரத சக்ரம். ஒன்பதாவது சர்வானந்தமயம் சக்ரம். இதைத்தான் ஸ்ரீ வித்யாவில் நவாவரணம் என்று சொல்கிறோம். மேலே சொன்னவைதான் அந்த ஒன்பது ஆவரணங்களினுடைய பெயர்கள். இது ஒன்றின்மேல் ஒன்றாக படிப்படியாக இருப்பதால் மேரு பிரஸ்தாரம் என்று பெயர்.

அந்த சிந்தாமணியில் மேரு பிரஸ்தாரம் என்கிற பீடம் இருக்கிறது. அதில் இந்த ஒன்பது நிலைகளையும் கடந்து, இந்த ஒன்பது ஆவரணங்களையும் கடந்து சர்வானந்தமய சக்ரத்தில் அம்பாள் எழுந்தருளியிருக்கிறாள். இதற்குள்ளேயே ஷடங்க தேவதைகள், பஞ்சபஞ்சிகா தேவதைகள் என்றெல்லாம் இருப்பார்கள். அந்த சர்வானந்த மய சக்ரத்தில் படிநிலைகளாக இருப்பார்கள். இது குறித்து நாம் பின்னர் விவரமாக பார்ப்போம். இப்போது இந்த சர்வானந்த மய சக்ரத்திற்கு மேலே, அம்பாள் எழுந்தருளியிருக்கிறாள். எப்படி எழுந்தருளியிருக்கிறாள் என்பதுதான் இந்த நாமம். எப்படி எழுந்தருளியிருக்கிறாள் எனில் பஞ்ச ப்ரஹ்மாஸந ஸ்திதாவாக எழுந்தருளியிருக்கிறாள். மீண்டும் இன்னொரு முறை இதை குறிப்பிடுகிறேன்.

இந்த நாமம் எதைக் குறிக்கிறதெனில், முதலில் ஸுமேருவில் தொடங்கி ஸ்ரீ மந்நகரத்திற்கு வந்து பிறகு சிந்தாமணிக்கு வந்து இப்போது இந்த பீடத்தை தரிசனம் செய்தாயிற்று. அந்த பீடத்திற்கு மேலே இருக்கக்கூடிய அந்த சர்வானந்த மய சக்ரத்தையும் தரிசனம் செய்தாயிற்று. இதுதான் அந்த பிந்து ஸ்தானம். அதற்குமேல் அம்பாளினுடைய ஆவிர்பாவம் இருக்கிறது. அங்கு அம்பாள் பஞ்ச பிரஹ்மாஸந ஸ்திதாவாக இருக்கிறாள். சர்வானந்த மய சக்ரம் என்கிற பிந்து ஸ்தானத்திற்கு மேலே அம்பிகையினுடைய சிம்ஹாஸனம் இருக்கிறது.
ஒரு விருட்சத்தில் இரண்டு பறவைகள் உட்கார்ந்திருக்கும். அதில் ஒரு பறவையானது பழத்தை சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்.

இன்னொரு பறவையானது எதையுமே செய்யாமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் பறவையை பார்த்துக் கொண்டே இருக்கும். இந்த பழத்தை சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் பறவை என்பது ஜீவாத்மா. அது கர்மாவை அனுபவிக்கின்றது. எந்தப் பழத்தையும் சாப்பிடாமல் இருக்கக்கூடிய பறவை என்பது பரமாத்மா. அதை கர்மா தொடுவது கிடையாது. எப்போது இந்த ஜீவாத்மாவானது இந்த பரமாத்மா என்கிற பறவையைப் பார்த்து, ‘‘ஐயோ… இந்த பழத்தை சாப்பிட்டுக் கொண்டே இந்த பந்தத்தில் சிக்கியிருக்கிறோமே… எப்போது சுதந்திரமாக எதிலேயும் பட்டுக் கொள்ளாமல் இருக்கப் போகிறோம்…” என்று ஜீவாத்மாவிற்கு எண்ணம் தோன்றுகிறதோ, அப்போது ஜீவாத்மாவிற்கு ஞானம் சித்திக்கின்றது.

அப்போது எதுவுமே செய்யாமல், எல்லாவற்றையும் தானே செய்வதாக நினைத்துக் கொள்வது யாரெனில், இந்த limited self ஆக இருக்கக் கூடிய – small i – சிறிய நான் என்கிற தேகம் என்று நினைக்கக் கூடியது. ஜீவாத்மா. எல்லாவற்றையும் செய்துவிட்டு எல்லாவற்றையும் கடந்து நிற்பது யாரெனில், எந்தவித limitations இல்லாமல் இருக்கக் கூடிய இந்த பெரிய நான் – என்கிற பரமாத்மா. அதனால்தான் இந்த பெரிய நான் (ஆங்கிலத்தில் capital I) என்பதான பரமாத்மா. அதனால்தான் இந்த பெரிய நான் என்பதற்கு கடவுள் என்று பெயர். புட்டபர்த்தியில் ஒரு விஷயம் நடக்கும். ஒரு கல்லூரி மாணவன் தரிசனத்திற்காக வந்திருப்பான். புட்டபர்த்தி பாபா, ஆங்கிலத்தில், what is your name…’’ என்று கேட்டார்.

அந்த மாணவன் அதற்கு, you know swamy என்பதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கே எல்லாமுமே தெரியுமே சுவாமி. மீண்டும், சுவாமி, ‘‘where did you come from” என்பார். அதற்கு அந்த பையன் you know swamy என்றான். மீண்டும் சுவாமி, what is your fathers name என்றார். அதற்கும் அந்த மாணவன் you know swamy என்றான். What are you studying என்றதும், அதற்கும் you know swamy என்றான். இப்படியே எல்லா கேள்விகளுக்கும் அந்த மாணவன் பதில் சொல்லிக் கொண்டே இருந்தான். அப்போது, சுவாமி அந்த மாணவனின் பக்கம் திரும்பி, ‘‘எனக்கு எல்லாமும் தெரியும்ப்பா… அப்புறம் ஏம்ப்பா நேத்து நைட் என் படத்துக்கு முன்னாடி உட்கார்ந்துகிட்டு எங்கிட்ட பேசுங்க… எங்கிட்ட… பேசுங்கன்னு சொன்னே’’ என்று மீண்டும் கேட்டார்.

அப்போது நேற்று இரவு படத்துக்கு முன்னால் உட்கார்ந்து பேசியது அவருக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது அவனுடைய பெயர்… அவனுடைய அப்பா பெயர்… போன்றவையெல்லாம் தெரியாதா…. பிறகு ஏன் இதையெல்லாம் கேட்கிறார் எனில், பக்தனுக்கும் பகவானுக்கும் இருக்கக்கூடிய நிலையை தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து உண்டாக்குகிறாரே தவிர, அவருக்கு ஒன்னும் தெரியாமல் இல்லை. இந்த இடத்தில் அதிமுக்கியமான ஒரு உபதேசத்தை சுவாமி அளிக்கிறார். எதுவுமே தெரியாத மனிதன் எல்லாமுமே தெரிந்ததாக நினைத்துக் கொள்கிறான். எல்லாமே தெரிந்த இறைவன், எதுவுமே தெரியாததுபோல் காட்டிக் கொள்கிறான். எப்படி கீதையில் நான் எல்லாமும் செய்தாலும் எதையுமே நான் செய்வதில்லை என்று சொல்கிறானோ அப்பேற்பட்ட உயர்ந்த நிலை.

இங்கு அம்பாள் எப்படியிருக்கிறாள் எனில், பஞ்ச பிரஹ்மாசனத்தில் இந்த மொத்தப் பிரபஞ்சமுமே எந்த ஐந்து செயல்கள் மூலம் இயங்குதே அந்த ஐந்து செயல்களை தானே நடத்திக் கொண்டு, பிரம்ம விஷ்ணு ருத்ர சிவ சதாசிவர்களை வைத்து அதன் மீது அம்பிகையானவள் சித் சொரூபமாக அமர்ந்திருக்கிறாள். அவள் சித் சொரூபமாக உட்கார்ந்திருப்பதானால்தான் இந்த ஐவருமே செயல்பட முடிகின்றது. எந்த பிரபஞ்சத்தில் கணத்திற்கு கணம் சிருஷ்டி ஸ்திதி… என்று பஞ்ச கிருத்தியங்களும் அதாவது ஐந்தொழில்களும் நடந்து கொண்டிருக்கிறதோ, அவை எல்லாவற்றையுமே தனக்கு கீழ் வைத்துக்கொண்டு அதன்மீது ஆசனமாகக் கொண்டு, சத் சொரூபமான காமேஸ்வரரின் மடியில் சித்சொரூபமான அம்பாள் உட்கார்ந்திருக்கிறாள். இவர்கள் இருவரையும் தரிசிக்கும்போது ஏற்படக்கூடியது ஆனந்தம். அதனால், அம்பாள் சச்சிதானந்த மூர்த்தியாக இருக்கிறாள்.

இந்த தரிசனம் இவனுக்கு கிடைக்கும்போது இவனுக்குள் என்ன மாற்றம் வருகின்றதெனில், இப்படி அம்பிகை அமர்ந்திருக்கும் கோலமானது அகண்டாகாரமானதாகும். இந்த ஐவரும் சிந்தாமணி கிரஹத்தில் பஞ்ச பிரம்மாக்களாக இருக்கிறார்கள். இப்போது பாருங்கள்… இந்த பஞ்ச பிரம்மாக்களில் இருந்து பஞ்ச பூதங்கள் வருகின்றது. இந்த பஞ்ச பூதங்களிலிருந்து பஞ்ச தன்மாத்திரைகள் வருகின்றது. இந்த பஞ்ச தன் மாத்திரை களிலிருந்து பஞ்ச ஞானேந்திரியங்கள் வருகிறது. இந்த பஞ்ச ஞானேந்திரியங்களிலிருந்து பஞ்ச கர்மேந்திரியங்கள் என்று அழைக்கப்படுகின்ற சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தங்கள் வருகின்றது.

(மெய், வாய், கண், மூக்கு, செவி) போன்றவற்றால் உணரப்படும் விஷயங்கள் வருகின்றது. இப்போது இவன் இவ்வளவு நாளும் லௌகீகமான இந்த உலகத்தில் ஐந்து இந்திரியங்களால் மனதைக் கொண்டு, கர்மேந்திரியங்களால் உண்டான விஷய சுகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். காதினால் சப்தத்தையும், தோலால் ஸ்பரிசத்தையும், உருவம் என்கிற ரூபத்தை கண்ணினாலும், நாக்கினால் ரசத்தையும், மூக்கினால் வாசனையை உணருகின்றான். உலகத்தின் மேல் பஹிர்முகமாகச் சென்று இந்த விஷயத்தை அனுபவித்துக்கொண்டிருந்தான்.
(சுழலும்)

ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா

Related posts

Bits

பிறவி என்றால் என்ன பொருள்?

ஜோதிடத்தில் பரிகாரம் என்பது விஞ்ஞானம்