கொலுப்படி உணர்த்தும் தத்துவம்

 

* தொடக்கத்தில் நாம் எல்லோரும் ஓர் அறிவுள்ள புல், செடி, கொடிகளாக, அறிவு விரிவடையாத நிலையில் இருந்தோம். அதைக் குறிப்பதற்காகச் செடி கொடிகள், தாவரங்கள், பூங்காக்கள், விவசாய நிலங்கள் ஆகியவை கீழே முதல் படியில் வைக்கப்படுகின்றன.
* இறைவனின் அருளால், சற்றே அறிவு வளர்ச்சி பெற்று ஈரறிவு உள்ள பிராணிகளாகிய நத்தை, சங்கு முதலியவைகளாக அடுத்தடுத்த பிறவிகளில் பிறக்கிறோம். அதைக் குறிக்கவே, சங்கு, நத்தை முதலியவற்றின் பொம்மைகள் இரண்டாம் படியில் வைக்கப்படுகின்றன.
* மேலும் இறைவனின் அருள் கிட்டவே, மேலும் அறிவு வளரப் பெற்று, மூன்று அறிவு கொண்ட எறும்பாக நாம் அடுத்த பிறவிகளில் பிறக்கிறோம். அதைக் குறிக்கவே எறும்பு உள்ளிட்ட ஊர்ந்து செல்லும் பிராணிகளின் பொம்மைகள் மூன்றாம் படியில் வைக்கப்படுகின்றன.
* இறைவன் தனது அருட்பார்வையை மேலும் நம்மேல் செலுத்தவே, நாம் மேலும் அறிவு வளர்ச்சி அடைந்து, நான்கு அறிவு உடைய நண்டு, வண்டு போன்ற உயிரினங்களாகப் பிறக்கிறோம். அதைக் குறிக்கும் வகையில், நண்டு; வண்டு உள்ளிட்டவற்றின் உருவங்கள் நான்காம் படியில் வைக்கப்படுகின்றன.
* மேலும் அறிவு விரிவடையவே, ஐந்தறிவு உள்ள பறவை, விலங்குகளாக நாம் பிறக்கிறோம். அதைக் குறிக்கும் விதமாக, ஆயர்கள் மாடு மேய்ப்பதைச் சித்தரிக்கும் பொம்மைகள், மூன்று குரங்கள் அமர்ந்திருக்கும் பொம்மை போன்ற பறவை – விலங்குகளில் உருவங்கள்
ஐந்தாம் படியில் வைக்கப்படுகின்றன.
* அதன்பின், இறையருளால் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை நாம் எய்தினோம் என்று உணர்த்தவே, ஆறாம் படியில், காவலாளிகள், மரப்பாச்சி பொம்மைகள், வியாபாரிகள், விவசாயிகள் என மனித வடிவங்கள் வைக்கப் படுகின்றன.
* மனிதப் பிறவி எடுத்தபின், இவ்வுலக சுகங்களிலே ஈடுபடாமல், இறைவனை நோக்கிய பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று உணர்த்தவே, மனித நிலையில் இருந்து இறைபக்தியால் மேல் நிலையை அடைந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஆச்சாரியர்கள் உள்ளிட்டவர் களின் வடிவங்கள் அவரவர் வழக்கப்படி ஏழாம் படியில் வைக்கப்
படுகின்றன.
* எட்டாம் படியில், இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள தேவர்கள், நவக்கிரக தேவதைகள், அஷ்ட திக் பாலகர்கள் உள்ளிட்டவர் களின் பொம்மைகள் வைக்கப்படுகின்றன. தேவலோக சுகங்களில் உள்ள ஆசையைக் கடந்தால்தான், அதற்கும் மேல் படியில் உள்ள இறைவனை நாம் அடைய முடியும் என்பதை உணர்த்தவே, இப்
படிக்கட்டு இறைவனுக்கும் மனிதனுக்கும் நடுவே வைக்கப்பட்டுள்ளது.
* மேல் படியான ஒன்பதாம் படியில், இறைவன் – இறைவியின் உருவங்கள் வைக்கப்படுகின்றன. ஓரறிவு கொண்ட புழுவாகவும் செடி கொடியாகவும் பிறந்து, அதன்பின் ஊர்வன, பறப்பன எனப் பல்வேறு பிறவிகள் எடுத்து, அதன் பின் மனிதப் பிறவி பெற்று, இறைவனின் அருளால் நிறைவாக இறைவனை அடைகிறோம் என்பதை இந்த ஒன்பதாம் படி உணர்த்துகிறது.
கொலுவை வைக்கத் தொடங்கும் போது, மேல் ஒன்பதாம் படியில் முதலில், அவரவர் வழக்கத்துக்கேற்ப விநாயகர் பொம்மையை வைத்துத் தொடங்கி, அதன்பின் மற்ற தெய்வங்களின் பொம்மைகளை வைத்து, அதன்பின் கீழ் நோக்கி ஒவ்வொரு படியிலும் அந்தந்த படிகளுக்குரிய பொம்மைகளை வைக்க வேண்டும் என்ற மரபு உள்ளது. இப்படி ஒன்பது படிகளாகக் கொலு வைக்க இயலாதவர்கள், கீழ்ப் படிக்கட்டுகளில் பூங்கா, விவசாயி, காவலாளி, வியாபாரி, பழங்கள் போன்ற பொம்மைகளையும், அதற்கு மேல் பக்தர்கள், முனிவர்கள், மகான்கள், தேவர்களின் பொம்மைகளையும், அனைத்துக்கும் மேலே தெய்வங்களின் வடிவங்களையும் வைத்து கொலுவை அமைக்கலாம்.

ஜெயசெல்வி

Related posts

மேஷ லக்னக்காரர்கள் குபேர சம்பத் பெறும் திருத்தலம்

அஷ்டம தசையில் புதிய முயற்சிகள் செய்யலாமா?

தொட்டதை துலங்க வைக்கும் நவராத்திரி