கருணைச் சிகரம் நரசிங்கம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிங்கப்பெருமாள் கோயில்

இந்தத் தலத்திற்கு சிங்கப் பெருமாள் கோயில் என்றே பெயர். சென்னை தாம்பரம் & செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அமலையைக் குடைந்து பல்லவர்கள் பாணியில் கட்டப்பட்ட குடைவரைக் கோயிலாகும். நரசிம்மர் அகக்குகையான இருதயத்தில் வசிப்பதாக வேதங்கள் விவரிக்கின்றன. எனவே, இங்கு புறத்திலும் கற்குகைக்குள் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார்.
சந்நதிக்கு அருகே நுழையும்போதே துளசியும், பச்சைக் கற்பூரத்தின் மணமும் மெல்ல மனதை வருடும். மெல்ல கண்மூட வைக்கும். சட்டென்று பெரிய பெருமாளைப் பார்க்க மனம் ஒன்றாய் குவியும். வலதுகாலை அழகாய் மடித்து, இடது காலை கீழே அழுத்தமாய் படரவிட்டு ஆஜானுபாகுவாய் ராஜசிம்மமாய் அருள் பொழிகிறார்.

உக்கிரநரசிம்மராய் அமர்ந்ததால் நெற்றிக்கு நடுவே மூன்றாவது கண் அதாவது த்ரிநேத்ரதாரியாய் காட்சி தருகிறார். தீபத்தை ஏற்றி மெல்ல திருநாமம் நகர்த்தி நெற்றிக் கண் பார்க்க சட்டென்று நம் உடல் சிலிர்த்துப் போடுகிறது. சட்டென்று நெஞ்சு நிறைகிறது. முகம் முழுதும் எப்போதும் பொங்கும் சிரிப்பாய் பிரமாண்டமாய் திகழும் பெருமாளை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது.

ஜாபாலி மஹரிஷிக்காக கருணையோடு வந்தமர்ந்த புராணம் அவர் பார்க்க நம் மனதில் மெதுவாய் மலர்கிறது. வேறொரு யுகத்திற்கு மெல்ல நகர்கிறது. அந்த அடர்ந்த கானகத்திற்கு நடுவே பாடலாத்ரி எனும் சிவந்த மலையில் சுகாசனத்தில் சாய்ந்திருந்த ஜாபாலி மஹரிஷி நிமிர்ந்து பத்மாசனத்தில் அமர்ந்தார். தலை திருப்பி வானம் பார்க்க விண் வெண் சிகப்பு மென்மையாய் படர்ந்தது. மஹரிஷி குதூகலித்தார்.

மெல்ல கண்கள் மூடினார். எம்பெருமானைப் பார்க்க வேண்டும் என்ற தாபம் அவரைச் சூழ்ந்தது. உள்ளுக்குள் அலை அலையாய் பரவியது. மெல்ல எங்கோ கரை கடந்து எழுந்தது. பார் கடலில் விண்ணை முட்டும் ஒரு பேரலை எழுந்து பாம்பணையின் மீது சயனித்திருந்த எம்பெருமானை காணும் தீராதாகத்தால் முட்டி முட்டித் திரும்பியது. ஆனால், அதனின்று ஒரு துளி எகிறி பரந்தாமனின் திருவடியை தொட்டது. அந்தப் பேரழகன் பரந்தாமன் அந்தத் துளியைப் பார்த்தார். துளி உருகித் தவித்தது.

அந்த பால பாகவதனின் பெயர் பிரகலாதன். அவன் தந்தை ஹிரண்யகசிபு தன் பிறப்பின் ரகசியம் மறந்திருந்தான். தன்னை தேவனாக்கி தொழுது நில் என்று தொடை தட்டி அமர்ந்தான். பாகவதன் பிரகலாதன் யார் பரமன் என்று அவனுக்கு ஞாபகப் படுத்த முனைந்தான். அசுரனாய் பிறந்ததினாலே தேவனையும், தேவத் தலைவனையும் எதிர்க்க வேண்டும் என வெகுண்டு எழுந்தான்.

‘‘நானே உனக்குத் தலைவன்… நீ வழிபட வேண்டியவன் எங்கோ உறங்கிக் கொண்டிருப்பவனல்ல. உன் எதிரே இருக்கும் இந்த ஹிரண்யன்தான் உன் வழிபாட்டிற்குரியவன்’’ என்று பெரிய பல் காட்டிக் கூவுவான். வழிபடாதவர்களை வகிர்ந்தான். வழிபட்டோர்களை தன் அரியணைக்கு எதிரே அமர்த்தினான். ஆனால், எங்கோ பல்லில் சிக்கிய நாராய் தன் மகன் நெருடிக் கொண்டிருந்தான். மெல்ல லாவகமாய் எடுக்க வேண்டுமே எனக் கவலை கொண்டான். தன் பெருநகம் தன் நாவைக் கிழிக்குமோ என்று பயந்தான்.

பிரகலாதன் எப்போதும் தன் நிலையிலிருந்து பிறழாது வாழ்ந்தான். எம்பெருமானைத்தவிர வேறு எதையும் அறியாதிருந்தான். அருகே அண்டியோரை அவர் பதம் சேர்த்தான். மெல்ல ஹிரண்யகசிபுவின் செவியிலும் பரந்தாமன் நாமம் எங்கிருந்தோ எதிரொலித்தது. என்னவென்று திரும்பிப் பார்க்க… பிரகலாதன் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நாராயணனின் நாமத்தை
உபதேசித்துக் கொண்டிருந்தான். ஹிரண்யனின் கண்கள் தீக் கங்குகளை குமுறிக் கொண்டிருந்தது. அது குழந்தைதானே என்று மனம் மெல்ல குளுமையாகியது. குழந்தை பெரிய பண்டிதனாய் மாறியிருந்தது. தன் தந்தையின் நினைவை எல்லோர் நெஞ்சிலிருந்தும் அழிக்கத் துவங்கியது.

‘‘என் தந்தை வெறும் கருவி. அதை இயக்குபவன் நாராயணன். அவரைச் சரணடையுங்கள். அவர் பதம் பற்றிடுங்கள். தந்தை பற்றிய பயம் அறுத்திடுங்கள்’’ என்று நிதானமாய், தீர்க்கமாய் பேசியது. ‘இதை உங்கள் தந்தையிடம் கூற முடியுமா’ என்று கேட்டதற்கு மெல்ல சிரித்தது. ‘’கூறுவது என்ன… அவரே பார்ப்பார்’’ என்று மழலையாய் சிரித்தது. அதைக்கேட்ட கூட்டம் மெல்ல மிரண்டது. சற்று பின்னே நகர்ந்து உட்கார்ந்தது.‘‘மூவுலகங்களும் என் பெயர் சொன்னால் குலுங்கும் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? என் குலப் பெருமை உன்னால் குன்றினால் உன்னை கொன்று போடவும் தயங்கமாட்டேன். மூடனைப் போல் பேசாதே. இந்த உலகத்திற்கு அதிபதி யார்? இப்போதே சொல்!’’

ஹிரண்யகசிபுவின் வார்த்தைகளை வணக்கமாய் கைகட்டி கேட்டான். தந்தை எதிரே தலை தாழ்த்தி தீர்க்கமாய் பார்த்தான். தர்மத்தை அழகுபட கூறினான்.‘‘தந்தையே… நீர் தந்தை எமக்கு. நாராயணர் தந்தை நமக்கு. உங்கள் குழப்பம் மிக எளிது. பணிவாய் பரந்தாமனிடம் கேட்க சித்தம் தெளிவாகும். அவர் தவிர வேறு எதுவும் எங்கேயும் இல்லை. இது உங்களின் பார்வைப் பிசகு. அது தெளிவானால் பரம பதம் நிச்சயம். அது இங்கேயே இப்பொழுதே உள்ளது. அண்டமும், இந்தப் பிண்டமும், சகஸ்ரகோடி உலகங்களும் எந்தப் புருஷனால் சிருஷ்டிக்கப் பட்டதோ, எவரால் பாலிக்கப்படுகிறதோ அவரே உமக்கும், எமக்கும் அகிலத்துக்கும் தந்தை. அவரே அதிபதி’’ என்று நிதானமாய் சொன்னான்.

‘‘இந்த ஜகத்திற்கு அதிபதி அந்த நாராயணன் என்று சொன்னாயல்லவா. அவன் எங்குமிருக்கிறானா?’’ ‘‘அவர் உங்களுக்குள்ளும் இருக்கிறார்!’’ ஹிரண்யன் வெகுண்டான். ‘‘அப்படியெனில் இப்போது உன் தலையை வெட்டுகிறேன். உன் நாராயணன் எப்படி வருகிறான் என்று பார்க்கிறேன்’’ என்று மெல்ல நகர்ந்தான். ‘இங்கே உள்ளானா அவன்’ என்றான். பிரகலாதன் ‘ஆமாம்’ என்றான். இன்னும் நகர்ந்து ‘அங்குமுள்ளானா’ என்று அந்த கம்பத்தைக் காண்பித்தான். பிரகலாதன் தலையசைக்க ஹிரண்யன் நகர்ந்து கதையால் அந்த கம்பம் எனும் அசையாத மையச் சக்தியை தன் அகங்காரம் எனும் கதையால் அடிக்க அது வெடிச்சிதறலாய் பேரிடியாய் அந்தக் கம்பத்திலிருந்து வெளிப்பட்டது.

ஸ்தம்பமாய், ஸ்தாணுவாய் இருந்த அந்த மையச் சக்தி முற்றிலும் வேறொரு ரூபத்தில் கிளர்ந்தெழ ஆரம்பித்தது. பிரபஞ்சத்தின் மையம் அசைந்ததால் மூவுலகமும் அதிர்ந்தது. இதென்ன விசித்திரம் என்று தேவர்களும், பிரம்மாக்களும் பூலோகம் திரும்பினர். அசுரசேனாதிபதிகள் நடுங்கினார்கள். அந்தச் சக்தியின் உருவம் பார்த்து விதிர்த்துப் போனார்கள். மனிதனாகவும் இல்லாமல் மிருகமாகவும் இல்லாமல் நர உடலும், சிங்க முகத்தோடும் இருந்தது. உருகிய தங்கம் போன்ற கண்களோடு கூர்மையாய் பார்த்தது. சிங்க முகத்தின் பிடரி சிலிர்த்து அசைந்தது. பிடரி மயிர்கள் மேகத்தை அடித்தது.

அவர் கர்ஜிக்கும்போது குகைபோலுள்ள அந்த வாய் திறந்தது. கன்னங்கள் பிளந்து பெருஞ் சிரிப்போடு பெரிய பெருமாளாய் வானுக்கும் பூமிக்குமாய் நிமிர்ந்தார். நரக லோகத்தையே தன் ஆயுதமாகக் கொண்டார். நெற்றிக்கு நடுவே பெருஞ்ஜோதி தகதகத்து எரிந்தது. நான்கு பக்கங்களிலும் பரவிய கைகளை உடையது. சங்கு சக்கரத்தோடு பிரயோகமாய் சுழற்றியது.
ஹிரண்யன் ராஜசிம்மத்தின் அருகே போனான்.

நீ என்ன மாயாவியா. ஜாலவித்தை காட்டுகிறாயா. உன் வித்தையை என் மகனிடம் வைத்துக் கொள் என்று தன் கதையால் தொடர்ச்சியாய் தாக்கினான். சிம்மம் சிலிர்த்துத் திரும்பியது. காலை, மாலை எனும் இரண்டு வேளையுமல்லாத சந்த்யா வேளை எனும் அந்திப் பொழுதில் ஆயிரம் சூரியனும் ஒன்றாகும் பெருஞ் சிவப்பாய் திகழ்ந்த அந்த நரசிம்மர் ஹிரண்யனை அள்ளி எடுத்தார். ஞானம், அஞ்ஞானம் என்று இரு வாசலுக்கு நடுவேயுள்ள பெருவீட்டு வாசலில் வைத்து அவன் நெஞ்சைக் கிழித்தார்.

அவன் அகங்காரத்தை தன் சக்ராயுதத்தால் இருகூறாக்கினார். பேய்போல் அலறினான். அவனை மாலையாக்கினார். தன் கழுத்தில் தொங்கவிட்டார். நரசிம்மர் அரண்மனையின் சிங்காசனத்தில் கர்ஜிப்போடு அமர்ந்தார். அரண்மனை கொதித்துக் கொண்டிருந்தது. பிரகலாதனின் அகம் குளிர்ந்து கிடந்தது. குளுமையான் தோத்திரங்களால் அவரை குளிர்வித்தான். அவரும் மெல்ல உருகினார். மெல்ல அள்ளி தன் உள்ளத்தில் அமர்த்திக்கொண்டார்.

தேவலோகம் ஆச்சரியத்தில் ஆனந்தித்தது. நரசிம்மர் மெல்ல நகர்ந்து சிவந்த பாடலாத்ரியை கருணையோடு பார்த்தது.ஜாபாலி மஹரிஷி நாதழுதழுக்க உச்சியைப் பார்க்க நரசிம்மர் உக்கிரராய், நெடுமரமாய் அவரெதிரே தோன்றினார். மஹரிஷி இரு கைகளையும் விரித்து எம்பெருமானே… எம்பெருமானே என்று அவர் பாதத்தில் நெடுமரமாய் வீழ்ந்து பரவினார். அவர் திருவடியை தம் சிரசில் தாங்கினார். நிரந்தரமாய் திருவடி பரவினார்.

நாம் தரிசித்து மெல்ல அந்த சந்நதியை விட்டு மனமின்றி நகர்கிறோம்.நாமத்தோடு அருள்பாலிக்கிறார். கருணை பொழியும் கண்களில், நம் கவலைகள் மெதுவாய் உதிர்ந்து போகின்றன. மலையே இங்கு பெருமாளின் திருமேனியாக உள்ளதால், இங்கு பௌர்ணமி கிரி பிரதட்சணம் விசேஷம். அதேபோல பிரதோஷகால வேளைகளில் திருமஞ்சனம் நடக்கிறது. நரசிம்மர் ஹிரண்யனை வதம் செய்த கோலத்தோடு இங்குள்ள புஷ்கரணியில் தம் திருமேனி நனைத்தெழுந்தார்.

எனவே அது சுத்த புஷ்கரணி என்றழைக்கப்படுகிறது. எம்பெருமானின் எதிரே கருடாழ்வார் கைகூப்பி அமர்ந்துள்ளார். ஆழ்வாராதிகள் சற்று உள்ளே தனிச் சந்நதிகளில் தனித்தனியாய் வீற்றிருக்கின்றனர். மெல்ல கிரிவலம் வந்து துவஜஸ்தம்பம் அருகே தண்டனிட்டு எழ நம் அகத்திலும் நரசிம்மர் கர்ஜிப்பார் எனில் அது மிகையில்லை.சிங்கப்பெருமாள் கோயில் செல்லுங்கள். அந்த அழகிய சிங்கத்தின் சிவந்த பாதம் பற்றிடுங்கள். வற்றாத வளங்கள் பெற்றிடுங்கள்.

தொகுப்பு: ஹரீஷ் ராம்குமார்

Related posts

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 79 (பகவத்கீதை உரை)

தெளிவு பெறுவோம்

மனநலத்தை சீர்படுத்தும் குணசீலம்