மூளையின் முடிச்சுகள் சிந்தனைகளின் தாக்கம்!

நன்றி குங்குமம் தோழி

சிந்தனைகள் எண்ணங்களைவிட வலிமைமிக்கது. அதாவது, ஆக்கப்பூர்வ சிந்தனைகள் மீது, தீராப்பற்றுதலுடன் இருப்பவர்கள் மரியாதைக்குரியவர்களே என்பது முற்றிலும் உண்மை. ஒவ்வொரு சிந்தனையாளர்களும், ஒவ்வொரு காலக்கட்டத்தின் புரட்சியாளர்களே. இது என்றுமே மறுக்க முடியாதது. இவர்களால் தான் மக்களிடம் ஆழமாகப் பதிந்த, பல தவறான பழைய சிந்தனைகளைத் தகர்த்து, சமூகத்தில் புதிய ஆக்கப்பூர்வ சிந்தனைகள் பிறந்தன என்பதின் வரலாற்றின் சாட்சியாக நாம் இருக்கின்றோம்.

எண்ணங்களுக்கும் (Thought) சிந்தனைகளுக்கும் (Thinking) இடையிலுள்ள வேறுபாடுகளை சில நேரங்களில் புரிந்து கொள்ளாமல் நாம் குழப்பிக் கொள்கிறோம். எண்ணம் என்பது இயல்பாய் மனதில் தோன்றக்கூடியது. ஆனால் எண்ணங்கள் என்றுமே, நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் சிந்தனை என்பது நமக்கு வரும் எண்ணங்களைக் கொண்டு, நம்மை சிந்தனைக்கு உட்படுத்துவது. இந்த வேறுபாட்டினை நாம் புரிந்துணரும்போது மட்டுமே, மனதில் ஏற்படும் பெரும்பாலான போராட்டங்களில் இருந்து வேறுபட முடியும்.

உதாரணத்திற்கு, உங்கள் கற்பனையில் மனதை ஒரு நெடுஞ்சாலையாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த மனம் என்ற நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள்தான் நமது மனதில் தோன்றும் எண்ணங்கள் ஆகும். இப்போது அந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள். இப்போது சொல்லுங்கள், நெடுஞ்சாலையில் வரும் வாகனத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியுமா? முடியாது என்பது தான் நேர்மையான பதிலாகும்.

இப்போது நீங்கள் நெடுஞ்சாலையில் நடுவில் சென்று நின்று விடுகிறீர்கள். அப்போது என்ன நிகழும்? உங்களை நோக்கி வரும் வாகனம் ஒன்று உங்களை ஒட்டியோ அல்லது உங்கள் முன்னாடியோ நிற்கும். அப்படியில்லையென்றால், கடைசியாக, அந்த வாகனம் கட்டுப்பாட்டை மீறி உங்கள் மீது மோதும். இது போலத்தான் உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை நீங்கள் கண்டுகொள்ளாத போது, அதுவாகவே தோன்றி மறைந்து விடும், ஆனால் அவ்வாறு தோன்றும் எண்ணங்களை எப்போது மனதில் வைத்து சிந்திக்கின்றீர்களோ, அப்போதுதான் மனதில் பல போராட்டங்கள் ஏற்படும். இவ்வாறு உங்கள் சிந்தனைகளின் தாக்கத்தினால் மனதில் ஏற்படும், சில போராட்டங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம்.

ஓவர் திங்கிங் எனப்படும் அதீத சிந்தனை பலருக்கும் பெரிய மன உளைச்சலையே ஏற்படுத்துகிறது. இதற்கான விளக்கத்திற்குள் போவதற்கு முன்னர், அதீதமாக சிந்திப்பது நல்லதா? கெட்டதா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்வோம். மேலே கூறியது போல, சிந்தனை என்பது பல ஆக்கப்பூர்வ நிகழ்வுகளை வரலாற்றில் ஏற்படுத்தியுள்ளது என்பதை நினைவு கூறும்போதே புரியும், உங்கள் சிந்தனை ஆக்கப்பூர்வமாக இருப்பதே நல்லதாகும். தேவையற்ற மற்றும் அர்த்தமற்ற சிந்தனைகள் நம்மை எப்போதுமே தொந்தரவுப் படுத்தக்கூடியவை.

உதாரணத்திற்கு.. நடிகர் விஜய்சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில், அவரும் அவரின் நண்பரும் பாஸ்போர்ட் எடுப்பதற்கு நேரடியாகச் சென்று பாஸ்போர்ட் அலுவலரைப் பார்த்திருந்தால், எளிதாக எடுத்து இருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக எத்தனையோ பொய்யான விஷயங்களைச் செய்து, எத்தனை விதமான பிரச்னைகளை அவர் சந்திப்பார். அதேபோலத்தான், நாம் செய்யும் ஒரு விஷயத்தைப் பற்றி நேரடியாகவே கேட்டுத் தெரிந்து கொள்வது அல்லது காலப்போக்கில் தெரிந்து கொள்ளலாம் என்கிற பொறுமையைக் கடைபிடித்தாலே அதீத சிந்தனையில் இருந்து தப்பிக்கலாம்.

அடுத்ததாக எதிர்மறை சிந்தனை. எதிர்மறை சிந்தனை என்பது நமது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒன்று. உதாரணத்திற்கு லவ்வர் என்கிற திரைப்படத்தில் வரும் கதாநாயகன் மணிகண்டனும், அவரைக் காதலிப்பவராக வருகிற கதாநாயகியும் நேர்மையாகத்தான் காதலிப்பார்கள். ஆனால் அவரின் காதல் மீதும், காதலிக்கின்ற பெண் மீதும் நம்பிக்கையின்றி சந்தேகங்களையும், தேவையற்ற கேள்விகளையும் தொடர்ந்து கேட்டுக்கொண்டும், சண்டை போட்டுக் கொண்டே இருப்பதால், இறுதியில் இருவரும் பிரிந்து விடுவார்கள். நாம் நேசிக்கிற, நம்புகிற வாழ்க்கையை இயல்பாக விட்டுவிட்டாலே, அது நமக்கான புரிதலை, நல்ல விஷயங்களை, நல்ல நினைவுகளை இயல்பாகத் தரும்.

அடுத்ததாக எதிர்மறை எண்ணம். எதிர்மறை எண்ணங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லைதான். நமக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்பது போன்ற எதிர்மறை எண்ணம் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தோன்றலாம். எதிர்மறை எண்ணங்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டாலே தானாகவே அது மறைந்து விடும். ஆனால் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற எண்ணத்தின் தூண்டுதலால், விளையும் எதிர்மறை சிந்தனையில், ஆபத்து ஏற்படுவதற்கு முன்பே, தனது உடல்நலத்தில் ஆரோக்கியக் குறை ஏற்பட்டு விடுமோ, குடும்ப உறவினர்களுக்கும் ஆபத்து ஏற்படுமோ போன்ற, ஆபத்து பற்றியே தொடர்சியாக சிந்தித்துக் கொண்டும், இது பற்றிய பயத்திலேயே இருப்பதும் பிரச்னைக்குரியது.

நமக்கு ஏற்படும் எண்ணங்கள் அனைத்தும் உண்மை இல்லை. அவை வெறும் எண்ணங்களே என்பதில் தெளிவு கொள்ளும் மனம், சிந்தனைச் சிக்கல்களில் சிக்காது. இல்லாத ஆபத்துகளைப் பற்றி தேவையில்லாமல் சிந்திப்பதால், தேவையற்ற பயமும், பதற்றமுமே ஏற்படும். இது போன்ற சிந்தனைக் கோளாறுகள் மனப்பதற்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகளவில் தோன்றும்.

மனப்பதற்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் சிந்தனைகளுக்கு மனநல மருத்துவ சிகிச்சையும், மனநல ஆலோசனையும் தேவை. இனி உங்களிடம் யாராவது வந்து, பயம் குறித்தோ, எதிர்மறை சிந்தனை பற்றியோ பேசினால், அவர்களிடத்தில் எண்ணங்களை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள அறிவுறுத்துங்கள் அல்லது அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வழிகாட்டுங்கள்.

Related posts

வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு!

கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய வாழ்க்கையை அளிக்கும் யோகாசனம்!

சல்மான் கான்-ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!