அடுத்த அசத்தல்

தமிழகத்தில் பள்ளிக்கு காலை நேரத்தில் செல்லும் குழந்தைகள் பெரும்பாலானவர்கள் காலை உணவை தவிர்ப்பதை, தடுக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை ெகாண்டுவந்தார். இத்திட்டத்தை, கடந்த 15.09.2022 அன்று மதுரை மாவட்டத்தில் துவக்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலமாக ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தினசரி காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் அட்டவணைப்படிவழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்காக 2023ம் ஆண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்க பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இத்திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டது. அரசு பள்ளிகளில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் வருகை அதிகரித்ததுடன், அவர்களின் ஊட்டச்சத்தும், கற்றல் திறனும் மேம்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, 2023-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்து 992 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் 15 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

தற்போது மேலும் ஒருபடியாக, தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம்தேதி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கீழச்சேரி அரசு உதவிபெறும் தொடக்க பள்ளியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதன்மூலம், மேலும் 2.50 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு, முதல்வரின் இந்த காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த நோக்கம் அப்படியே 100 சதவீதம் நிறைவேறியுள்ளது.

அதனால், இந்த மகத்தான திட்டம் மாணவர்கள் மத்தியில் மட்டுமின்றி, தாய்மார்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் எதிரொலியாக, இத்திட்டம் படிப்படியாக விரிவடைந்து வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் அடுத்தடுத்து பல்வேறு மக்கள்நல திட்டங்களை அமல்படுத்தி, அதிரடி காட்டும் தமிழக முதல்வரின் வெற்றிப்பயணத்தில், இதுவும் ஒரு அசத்தல் திட்டமாக இணைந்துள்ளது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை