சிதையா நெஞ்சு கொள்!

‘மனதில் உறுதி வேண்டும்’ என்னும் கருத்தைதான் ‘சிதையா நெஞ்சு கொள்’ என்று சொல்லி நம் நெஞ்சில் பதிக்கிறார் பாரதியார். உறுதியற்ற உள்ளம் கொண்டவர்களால் இந்த உலகில் எதையும் சாதிக்க முடியாது. தடுமாறும் பலவீன மனம் வாழ்வையும் தடுமாற வைத்து விடும். நபிகளாரிடம் ஒரு மனிதர் வந்தார். “இறைத்தூதர் அவர்களே, நான் வேறு யாரிடமும் சென்று எந்த அறிவுரையும் கேட்கத் தேவையில்லாத அளவுக்கு எனக்கு ஓர் அறிவுரை வழங்குங்கள்’’ என்றார். உடனே நபிகளார், “இறைவன் ஒருவனே என்று ஏற்றுக்கொள். பிறகு அதில் உறுதியாக இரு’’ என்றார்.

அதாவது, ஒரு கொள்கையை ஏற்றுக் கொள்வது பெரிய விஷயம் அல்ல. அந்தக் கொள்கையில் உறுதியாக நிலைத்து இருப்பதுதான் மிகப் பெரும் சாதனையாகும். நபித்தோழர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அனைவருமே சிதையா நெஞ்சு கொண்ட சீலர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். நபித்தோழர் பிலால் அவர்கள் கறுப்பு நிறத்தவர். நீக்ரோ அடிமை. மக்காவில் குறைஷித் தலைவர் ஒருவரிடம் அடிமையாக இருந்தார். நபிகளாரின் போதனைகளால் கவரப்பட்டு பிலால் இறைநெறியை மனமார ஏற்றுக்கொண்டார்.

ஆனால், இது அவருடைய எஜமானனுக்குப் பிடிக்கவில்லை. இஸ்லாமிய நெறியைக் கைவிடும்படி வலியுறுத்தினார். ஆனால், பிலால் சம்மதிக்கவில்லை. எஜமானனின் கோபம் எல்லை கடந்தது. பிலாலைக் கயிற்றால் கட்டி பாலைவனத்துக்கு இழுத்துச் சென்றார். வெயில் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. கொதிக்கும் பாலை மணலில் பிலாலை வெற்றுடம்புடன் கிடத்தி, அவர் மீது ஒரு பாறாங்கல்லையும் வைத்து அழுத்தி, “இப்போது சொல்; ஏக இறைவனை ஏற்றுக்கொண்டது தப்புதான் என்று சொல்; உடனே உன்னை விட்டுவிடுகிறேன்” என்றான் எஜமானன்.

பிலால் அவர்கள் சற்றும் மனம் தளரவில்லை. அத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டாரே தவிர அவர் ஏகத்துவக் கொள்கையை விட்டுவிட சம்மதிக்கவில்லை. அவருடைய திருவாய் “அஹதுன்… அஹதுன்…” (இறைவன் ஒருவனே, இறைவன் ஒருவனே) என்றே முழங்கிக் கொண்டிருந்தது. பிலால் அவர்கள் இறுதிவரை இஸ்லாமிய நெறியில் உறுதியுடன் இருந்தார்.

மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்டபோது, மக்களைத் தொழுகைக்கு அழைக்கும் உன்னத பணியில் பிலாலைத்தான் நபிகளார் அமர்த்தினார். அவருடைய சிதையா நெஞ்சுக்குக் கிடைத்த சிறந்த வெற்றி என்றே இதைக் குறிப்பிடலாம். வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் தங்கள் நெஞ்சில் பொறித்துக் கொள்ளவேண்டிய ஓர் அடிப்படையான அறிவுரை: ‘சிதையா நெஞ்சு கொள்.’

  • சிராஜுல் ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

(நபியே) நீர் அவர்களிடம் கூறுவீராக: “இறைவனை விடுத்து உங்களுக்கு இழப்பையோ லாபத்தையோ அளிப்பதற்கு சக்தி இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” (குர்ஆன் 5:76)

Related posts

இந்த வார விசேஷங்கள்

செவ்வாய்க்கிழமை நல்ல நாளா, இல்லையா?

கலைமகளின் கவின்மிகு கோயில்கள்