பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த முன்னேற்பாடுகள் காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சென்ற வாகனங்கள்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

செங்கல்பட்டு: பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை போலீசார் விரைந்து செயல்பட்டு, அங்கு போக்குவரத்து நெரிசலின்றி அனைத்து வாகனங்களும் செல்வதற்கு துரித நடவடிக்கை எடுத்தனர். இதனால், வெளியூர்களில் இருந்து சென்னை நோக்கி வந்த வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் கடந்து சென்றன. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நேற்று காலை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. காலையில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் சென்றனர். அவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர்கள் பூங்கொத்து வரவேற்றனர்.

முன்னதாக, கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பலர், தங்கள் குடும்பத்தினருடன் தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் அரசு பேருந்து மற்றும் பல்வேறு வாகனங்களில் சென்றிருந்தனர். இதையடுத்து, கோடை விடுமுறை முடிந்து நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி, வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து கோடை விடுமுறையை முடித்துக்கொண்டு ஏராளமான மக்கள் கடந்த 3 நாட்களாக சென்னையை நோக்கி படையெடுத்தனர்.

இதனால், செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் வெளியூர்களில் ஏராளமான வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, நேற்று முன்தினம் முதல் பரனூர் சுங்கச்சாவடியில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 6 பூத்களும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கெனவே இயங்கி வந்த 6 பூத்களுடன் கூடுதலாக 2 பூத்கள் திறக்கப்பட்டன.

இதனால், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணிவரை வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் தடையின்றி சென்னை மாநகரை அடைந்தன. மேலும், சுங்கச்சாவடி பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் கூடுதலாக நிறுத்தப்பட்டு, அங்கு போக்குவரத்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. தற்போது பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் வாகன நெரிசலின்றி இயல்பான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

Related posts

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!!

பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவி வருவதால் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுப்பு