தஞ்சாவூர் அருகே பயங்கரம் பாலத்தின் தடுப்பில் வேன் மோதி 4 பேர் பலி: சிறுவன் உட்பட 7 பேர் காயம்

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் அருகே நேற்று அதிகாலை பாலத்தில் தடுப்பில் வேன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுவன் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் மூணாவயல் பகுதியிலிருந்து வேளாங்கண்ணி செல்வதற்காக 11 பேர், ஒரு வேனில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். இந்த வேனை டிரைவர் சின்னபாண்டி என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை மனோராவில் உள்ள பாலத்தில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன், தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்புக்கட்டையில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிரைவர் சின்னப்பாண்டி (35), பாக்கியராஜ் (60), ஞானம்மாள் (60), ராணி (40) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த சந்தோஷ்செல்வம் (7), மரியசெல்வராஜ் (37), பாத்திமாமேரி (31), சரஸ்வதி (50), கணபதி (52), லதா (40) சண்முகத்தாய் (53), ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் போலீசார் காயம் அடைந்த 7 பேரை மீட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* தலா 2 லட்சம் நிவாரணம் முதல்வர் உத்தரவு
விபத்தில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பத்தினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது..! ஈஷா காய்கறி திருவிழாவில் திமுக எம்.பி பேச்சு!

மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மெல்ல மெல்ல சீரடைகிறது

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது