தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வளம்பக்குடி அருகில் இன்று (17.07.2024) காலை சுமார் 7.00 மணியளவில் கந்தர்வகோட்டையில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக ஈச்சர் வாகனம் மோதிய விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், கல்லாக்கோட்டை ஊராட்சி, கண்ணுகுடிபட்டியைச் சேர்ந்த முத்துசாமி (வயது 60) த/பெ.சின்னையன், ராணி (வயது 37) க/பெ. முருகன், மோகனாம்பாள் (வயது 27) க/பெ. ரமேஷ் மற்றும் மீனா (வயது 26) க/பெ. கார்த்திக் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில் தனலட்சுமி (வயது 36) க/பெ. செல்வராஜ் என்பவர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில், பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சங்கீதா க/பெ.கவியரசன் என்பவருக்கு சிறப்பு சிகிக்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா