தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை

*வாகன சட்ட விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணாசாலையில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதைனையில் ஈடுபட்டனர். வாகன விதிகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது.தஞ்சாவூரில் சாலைகளில் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிகளின் படி செல்கிறதா? இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனரா? என்பதை கண்காணிப்பதற்காக போக்குவரத்து காவலர்கள் அடிக்கடி வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்படுவதும், குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவின்படி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா அறிவுறுத்தலின் பேரில் தஞ்சாவூர் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் நிறுத்தி டிரைவிங் லைசன்ஸ், இன்சூரன்ஸ் சரியான முறையில் உள்ளதா ? மோட்டார் வாகன சட்டப்படி நம்பர் பிளேட் பிளேட் வடிவமைக்கப்பட்டுள்ளதா ? இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்துள்ளார்களா ? போன்றவை குறித்து சோதனை செய்தனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாதவர்களுக்கு ரூ.5000 அபராதமும், அதனை புதுப்பிக்காதவர்களுக்கு அபராதமும், மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் படி நம்பர் பிளேட் வடிவமைக்காதவர்களுக்கு அதாவது நம்பர் பிளேட்டில் நம்பரை தவிர வாசகம் எழுதி இருத்தல், நம்பர் இல்லாமல் வெறும் வாசகம் மட்டும் எழுதி இருத்தல், வாகனத்தின் ஒரு பக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருத்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.1000 மற்றும் இருசக்கர வாகனத்தில் இருவரை தவிர கூடுதலாக ஆட்கள் ஏற்றி சென்றவர்களுக்கு ரூ.1000 அபராதமும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல் நகரின் பல்வேறு இடங்களிலும் அதிரடி வாகன சோதனை நடந்து வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கூறும்போது,மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும் வெள்ளை கலரில் இருக்க வேண்டும். அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரில் இருக்க வேண்டும். வர்த்தக வாகனங்களில் மஞ்சள் கலரில் இருக்க வேண்டும். வர்த்தக வாகனங்களில் மஞ்சள் கலரில் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும்.

இவற்றில் முரண்பாடு இருந்தால் உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாதவர்கள் மற்றும் அதனை புதுப்பிக்க தவறியவர்கள், ஹெல்மெட் இல்லாமல் வாகன ஓட்டுபவர்கள், காரில் சீட் பெல்ட் இல்லாமல் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் குறித்து எடுத்துக் கூறி வருகிறோம். முறையாக அந்த விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகிறோம். நகரில் அனைவரும் வாகன சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை