தஞ்சாவூர் காவிரி கரையோர பகுதியில் பூ நார் தயாரிப்பில் தொழிலாளர்கள் விறுவிறுப்பு

தஞ்சாவூர் : பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பார்கள், அத்தகைய பூ நார் தயாரிப்பு தொழிலில் தஞ்சாவூர் மாவட்ட தொழிலாளிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, திருப்பந்துருத்தி, நடுக்காவேரி, கண்டியூர், உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் நெல் சாகுபடிக்கு அடுத்ததாக வாழை சாகுபடியை ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வாழை தோட்டத்தில் இலை, வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தார் ஆகிய சாகுபடி பருவம் முடிந்தவுடன் விவசாயிகள் வாழைத் தோட்டத்தை வாழைநார் உற்பத்தி செய்ய கூலி தொழிலாளிகளிடம் விலைக்கு விட்டு விடுகின்றனர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள், வாழைநார் தயாரிக்கும் தொழிலில் ஆண்கள் பெண்கள் என ஈடுபட்டு வருகின்றனர். வாழைத் தோட்டத்தில் வாழை மரத்தை வெட்டி, அதில் வாழை மட்டையை உரித்து, வெயிலில் நன்கு காய வைத்து பின்னர் அதை சிறிதாக பூ கட்ட பயன்படும் வகையில் உரித்து, தயார் செய்து அவற்றை விற்பனைக்கு கொண்டு சென்று அதில் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

மேலும் அதில் கிடைக்கும் வாழைத்தண்டை அப்பகுதியில் உள்ள சிறு வியாபாரிகளிடம் இலவசமாக வழங்குகின்றனர். அவர்கள் வாழைத்தண்டை துண்டு துண்டாக நறுக்கி விற்று வருமானம் ஈட்டுகின்றனர், வாழை நாரை ஒரு முடிச்சுக்கு 40 நார் வைத்து, அதை 50 கட்டுகளாக கட்டி வாகனம் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் இந்த பூ நார்கள் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு, திருச்சி, ஆகிய வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா ஆகிய வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆண்டு முழுவதும் பூமாலைகள் கிடைத்தாலும் அவற்றை தொடுக்க பயன்படும் வாழை நார் தயாரிக்கும் பணி தை மாதம் தொடங்கி 6 மாதங்கள் மட்டுமே நடைபெறுகிறது. கடவுள் சிலைகளையும், மனிதர்களையும் அலங்கரிக்கும் பூ மாலைகளை தாங்குவது வாழை நார்கள் தான். ஆகவே இந்த வாழைநார்கள் தயாரிக்கும் பணி தஞ்சை மாவட்டம் திருப்பந்துருத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாழைநார் தயாரிக்கும் பணி ஆறு மாத காலம் மட்டுமே, மழையால் வாழை மர பட்டை அழுகி விடுவதால் மழைக் காலங்களில் தொழிலாளர்களுக்கு வேலை இருக்காது.இந்தத் தொழில் செய்பவர்களில் படித்த பட்டதாரிகளும் உள்ளனர், வேலை கிடைக்காத காரணத்தினால் பூ நார் தயாரிக்கும் தயாரிக்கும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பூ நார் உரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள் கூறும்போது, அழிந்த வாழைத் தோட்டத்தை உரிமையாளரிடமிருந்து குத்தடி கணக்கில் பேசி விலைக்கு வாங்கி, கூலி தொழிலாளிகள் மூலம் நார் உரிக்கப்படுகிறது, திருப்பந்துருத்தியில் செய்யப்படும் நார்கள் பூமாலை கட்ட பயன்படுகிறது.

ஆனால் திருச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் செய்யப்படும் நார்கள் ஆக்கை என்ற பெயரில் பட்டைகளாக செல்கிறது. பூ நார் கட்டு ரூபாய் ஆயிரம் வரை விற்பனையாகிறது. மழைக்காலம் வந்தால் பூ நார் தயாரிக்கும் தொழில் பாதிப்பு ஏற்படும், விசேஷ காலங்களில் நாரின் விலை வேறுபடுகிறது. இந்தத் தொழில் மூலம் குறைந்த அளவே வருமானம் கிடைக்கிறது என்றும் தெரிவித்தனர்.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை