தஞ்சாவூர் வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி அடியில் சிக்கிய பைக் டயர்

*ரயிலை கவிழ்க்க சதியா?

*போலீஸ் விசாரணை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் அடியில் பைக் டயர் சிக்கியிருந்தது. ரயிலை கவிழ்க்க சதியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம்- காரைக்கால் இடையே எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு 10.30 எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் ரயில் கோவை, திருச்சி மார்க்கமாக தஞ்சாவூருக்கு நேற்று காலை 8.50க்கு வந்தது.

பின்னர் அங்கிருந்து 8.53க்கு காரைக்கால் புறப்பட தயாராக இருந்தது.அப்போது ரயிலில் ஒரு முன்பதிவு பெட்டியின் அடிபாகத்தில் பைக்கின் டயர் சிக்கியிருந்ததை பார்த்த ரயில்வே ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ரயில்வே ஊழியர்கள் பெட்டியின் அடிபாகத்தில் சிக்கியிருந்த டயரை உடனடியாக அகற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் ரயில் அங்கிருந்து 8.55க்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி ரயில்வே இருப்பு பாதை போலீசார் கூறுகையில், ரயில் நிலையத்திற்குள் ரெயில் நுழையும்போது இன்ஜின் மற்றும் ரயில் பெட்டி அடியில் ஏதாவது சிக்கியிருக்கிறதா என அதற்கான ஊழியர்கள் தினமும் பரிசோதிப்பது வழக்கம். அப்படி பார்க்கும் போது ஒரு முன்பதிவு பெட்டி அடிபாகத்தில் பைக்கின் டயர் சிக்கியிருந்தது தெரிய வந்தது. டயர் எப்படி சிக்கியது என தெரியவில்லை. திருச்சி, தஞ்சாவூர் இடையில் தான் டயர் சிக்கியிருக்க கூடும்.ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் யாரேனும் பைக் டயரை வைத்து இந்த சதிசெயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

Related posts

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு

எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு