தைப்பூசம் ஸ்பெஷல்: தைப் பூசமும் தமிழ்க் கடவுளும்

ராஜகம்பீரம் மிக்க பூசம் நட்சத்திரம்

நட்சத்திரங்களிலேயே ‘நான் வரப்போகிறேன்’ என்று முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு வருகின்ற ஒரே நட்சத்திரம் பூசம் மட்டுமே; இதற்கு முந்தைய நட்சத்திரத்தின் பெயர் ‘புனர்பூசம்’ என்பதாகும். பூசம் வந்து சேரப்போகிறது என்ற பொருளைக் கொண்டது புனர்பூசமாகும். இதனால் ஓர் அரசனைப் போல் முன்னறிவிப்புடன் வருகின்ற ராஜகம்பீரம் மிக்கது பூச நட்சத்திரம்.

தைப் பூசத்தில் வேல் வாங்கும் உற்சவம்

சுவாமிநாதன், குருசாமி, தகப்பன் சுவாமி, சாமியப்பன், அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்றெல்லாம் போற்றப்படும் முருகன் வேல்வாங்கும் உற்சவம் காண்பது நாம் அறிந்ததே. சூரபதுமனை வதம்செய்ய ஐப்பசி மாதத்தில் வாங்குவது சக்திவேல் ஆகும். ஆனால், இன்னொரு வேலையும் முருகப் பெருமான் வாங்குகிறார். அது ஞானவேல். அந்த வேல்வாங்கும் உற்சவம் தைப்பூசத்தில்தான் நடைபெறும். தான் ஞானபண்டிதன் என்ற வகையில் வைதீஸ்வரன் கோயிலில் உள்ள செல்வமுத்துக்குமார சுவாமியான முருகப்பெருமான், சக்தியிடம் வேல் பெருகிறார். இந்த வேலே எப்போதும் முருகனிடம் இருக்கும். சம்ஹாரம் செய்யும் சக்தி வேலைவிட, ஞானம் தரும் ஞானவேலுக்கே நலம் அதிகம் அல்லவா?

தைப் பூசமும் தமிழ்க் கடவுளும்

மாதந்தோறும் பூச நட்சித்திரம் வந்தாலும் தைமாதத்தில் வருகின்ற பூசத்திற்குத் தனிச்சிறப்புண்டு. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு சிறந்த நட்சத்திரத்துடன் பௌர்ணமி சேர்ந்து வரும். அவ்வகையில், தை மாதத்தில் பூசத்துடன் பௌர்ணமி புணர்ந்து வரும். பௌர்ணமி என்றால் மதி; மதி என்றால் அறிவு: இந்தப் பூச நட்சத்திரத்தின் அதிபதி குருபகவான் ஆவார். முருகன் குருவாக இருந்து தன் தந்தைக்கே ஞானோபதேசம் செய்தவர். ஆகவே, இந்த நாளில் முருகப் பெருமானை வழிபட்டால் ஞானம் ஓங்கும் திண்ணம்.

அயல்நாட்டுத் தைப்பூச வழிபாடு

மலேசிய நாட்டின் பழநிமலையாகத் திகழும் பத்துமலையில் தைப்பூச நாளில் ஞானவேலே கொண்டாடப்படுகிறது. மேலும், இதே தைப்பூச நன்னாளில்தான், புண்ணிய நதியில் நீராடுவது புண்ணியம் என்ற வகையில், பத்துமலையிலுள்ள ‘‘சுங்கைப்பத்து’’ என்ற புண்ணியநதியில் நீராடி வேலாயுதப் பெருமானை வணங்குகின்றனர். உலகிலுள்ள சீனர்கள், புத்த சமயத்தினர், ஆங்கிலேயர், சீக்கியர் என பலசமயத்தவர்களும் தைப்பூசத்தன்று காவடி சுமக்கின்றனர்.

தேவாரம் போற்றும் தைப்பூசம்

ஞானசம்பந்தர்கூட, இந்தத் தைப்பூச விழாவைக் காணாமல் போய்விட்டாயே என்று பூம்பாவையை எழுப்புகின்றபோது, ‘‘நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்’’ என்று பாடுகிறார்.

தொகுப்பு: நாகலட்சுமி

Related posts

குறை தீர்க்கும் பெருமாள்கள்

வள்ளலார் ஆற்றிய அரும்பணிகள்

ஆத்ம தரிசனம் என்றால் என்ன?