தைப்பூச திருவிழா நாட்களில் பழநிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

பழநி: தைப்பூச திருவிழா நாட்களில் பழநி வழித்தடத்தில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உள்ளது. இக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் தைப்பூசம் ஒன்றாகும். இவ்விழா வரும் ஜன.19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.

இவர்களில் பெரும்பாலானோர் பாதயாத்திரையாக வருவதால், ஊர் திரும்புவதற்கு பஸ்களில் அதிகமாக செல்கின்றனர். இந்நிலையில், பழநி வழித்தடத்தில் போதிய ரயில்கள் இல்லாததால், பக்தர்களும் பஸ்சை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பழநியில் இருந்து பிற ஊர்களுக்கு போதிய ரயில்கள் இயக்கப்படுவதில்லை. பழநி வரை இயக்கப்பட்டு வந்த சில ரயில்களும் பாலக்காடு வரை நீட்டிப்பு செய்யப்பட்டு விட்டது. எனவே, திருவிழா காலங்களில் மட்டுமாவது பழநி வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து பழநியைச் சேர்ந்த ரயில் பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி முருகானந்தம் கூறுகையில், ‘‘பழநியில் இருந்து திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதேபோல, பழநியில் இருந்து திண்டுக்கல், சேலம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த 2 ரயில்களுமே தற்போது பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ரயில்களால் கேரள மக்கள் மட்டுமே பயன்பெறும் சூழல் நிலவுகிறது. எனவே, தைப்பூச திருவிழாவிற்கு கோவை, மதுரை, காரைக்குடி, திருச்சி, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழநிக்கு வருவர். பக்தர்கள் வசதிக்காக திருவிழா நடைபெறும் நாட்களில் தினசரி சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்’’ என்றார்.

 

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு