கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: 25ம் தேதி தேரோட்டம்

கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 25ம் தேதி தைப்பூசம் தேரோட்ட வைபவம் நடக்கிறது. தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி, இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 5 மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காளசாந்தி பூஜை, மற்ற பிற கால பூஜைகள் நடந்தன. இதையடுத்து கொடிமரத்துக்கு மேற்கொள்ளபட்ட சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைக்கு பிறகு 5.45 மணிக்கு கொடியேற்றி மஹா தீபாராதனையும் நடந்தது. மேலும் கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானைக்கும், சோமாஸ் கந்தர் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடந்தது.

பூஜைகளை வைகுண்டம், செல்லக்கண்ணு பட்டர், மூர்த்தி பட்டர், வீரபாகு பட்டர் முன்னின்று நடத்தினர். கொடியேற்றத்தில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், மற்றும் திரளானோர் பங்கேற்றனர். முதல் நாளான இன்று இரவு கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி விதியுலாவும். நாளை பூத வாகனத்திலும், (18ம் தேதி) அன்னவாகனத்திலும், 19ம் தேதி வெள்ளியானை வாகனத்திலும், 20ம் தேதி வெள்ளி மயில் வாகனத்திலும், 21ம் தேதி காளை வாகனத்திலும், 22ம் தேதி மாலை 4 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜை, இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிகப்பு மலர் சூடி சிவன் அம்சமாக(ருத்திரர்) வீதியுலா வருதலும், அதைத்தொடர்ந்து வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்சமாக வீதியுலா நடைபெரும். 23ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பச்சை மலர் சூடி திருமால் அம்சமாக கிரிவலமாக வீதியுலா, இரவு 8 மணிக்கு கைலாசபர்வத வாகனத்தில், 24ம் தேதி மயில் வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது.

10ம் திருநாளான 25ம் தேதியன்று காலை 7 மணிக்கு சுவாமி சட்ட ரதத்திலும் கோ ரதத்தில் ஸ்ரீவிநாயகப் பெருமான் எழுந்தருளலைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு இந்திர வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறும். ஏற்பாட்டினை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோயில் ஊழியர்கள் சீர்பாத தாங்கிகள் செய்கின்றனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்