தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை: தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 400 நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் இருந்து, நேற்று அதிகாலை தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்ல இருந்த பயணிகளின் உடமைகள் மற்றும் பாஸ்போர்ட் ஆவணங்களை நேற்று முன்தினம் இரவு முதல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, தாய்லாந்துக்கு சுற்றுலா விசாவில் செல்ல இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 3 பயணிகள் வைத்திருந்த 8 அட்டை பெட்டிகளின்மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து, அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பதிலளித்தனர். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த அட்டை பெட்டிகளை பிரித்து பார்த்தனர். அதில் மேல்புறமாக இருந்த தின் பண்டங்களை அகற்றி பார்த்தபோது, உயிருள்ள நட்சத்திர ஆமைகள் தாய்லாந்துக்கு கடத்தி செல்லப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவற்றை எண்ணியபோது, ரூ.15 லட்சம் மதிப்பிலான 400 நட்சத்திர ஆமைகள் இருந்தன. பின்னர், 3 பேரின் தாய்லாந்து பயணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் ரத்து செய்து, அவர்களை கைது செய்தனர். சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆமைகள் மற்றும் 3 பயணிகளை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.

Related posts

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடையின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: கலெக்டர் அதிரடி

செடி, கொடிகள், மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் வாயலூர் பாலாற்று உயர் மட்ட பாலத்திற்கு ஆபத்து..? சாலையில் கிடக்கும் மண் குவியலை அகற்ற கோரிக்கை