தாய்லாந்து ரக பப்பாளி “ரெட்லேடி”

இது கோடைக்காலம். இந்த சீசனுக்குபலதரப்பட்ட பழங்களுமே நமது ஊரில் கிடைக்கிறது. என்னதான் ஆப்பிள், ஆரஞ்ச் என வெளியூர் பழங்களை சாப்பிட்டு வந்தாலும் நமது ஊரில் கிடைக்கும் பழங்கள்தான் நமக்கு பொக்கிஷம். பப்பாளி, கொய்யா, மாங்காய், சப்போட்டா என நமது ஊர் பழங்கள் சாப்பிடத்தான் மனம் எப்போது ஏங்கும். நமது ஊரில் நமது மண்ணில் நமது தோட்டத்தில் விளைந்த பழங்களைச் சாப்பிடும்போதுதான் நாம் முழுமையாக திருப்தியும் அடையமுடியும். வெளியூரில் கிடைக்கக்கூடிய பல பழங்களை சில விவசாயிகள் நமது ஊரில் பயிரிட்டு வருகிறார்கள். ஆனால், நமது ஊரில் கிடைக்கும் பழத்தைத்தான் நமது ஊர் மக்களுக்கு தருவேன் என பப்பாளியை மட்டும் பயிரிட்டு வருகிறார் விவசாயி வில்சன்.கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சி கடமான்குழியை சேர்ந்தவர்தான் விவசாயி வில்சன். இவர் முன்னாள் ராணுவ வீரரும்கூட. தனது பணிக்காலத்தை முடித்தவுடன் சொந்தவூருக்கு திரும்பி விவசாயம் செய்து வருகிறார்.

தனது பப்பாளி தோட்டத்தில் பழங்களை அறுவடை செய்வதில் மும்முரமாக இருந்த வில்சனை பார்க்க சென்றிருந்தோம். எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு வரவேற்றார். உங்களைப் பற்றியும் உங்களது விவசாயத்தைப் பற்றியும் சொல்லுங்களேன் என்றதும் மகிழ்ச்சியோடு பேசத்தொடங்கினார்.நான் ராணுவத்தில் டெலிகாம் டெக்னீசன் வேலை பார்த்தேன். பல்வேறு மாநிலங்களில் வேலை செய்துள்ளேன். கடைசியாக கல்கத்தாவில் வேலை செய்து வந்த நான் கடந்த 2006ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். அதன்பிறகு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்தேன். எனக்கு பூர்வீக சொத்து இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்தேன். அதற்காக நிதி நிறுவன வேலையில் இருந்து வெளியே வந்த நான் கடந்த 6 வருடத்திற்கு முன்பு எனது நிலத்தில் வாழை சாகுபடி செய்தேன். ரசாயன உரங்களை பயன்படுத்தினேன். ஆனால் போதிய மகசூல் கிடைக்காததால், வாழையில் பலத்த நஷ்டத்தை சந்தித்தேன். அதன்பிறகு வேறு பயிர்கள் சாகுபடி செய்ய நினைத்தபோது, இயற்கை விவசாயிகளின் தொடர்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நாம் ஏன் இயற்கை விவசாயத்தை செய்யக்கூடாது என முடிவு செய்தேன்.

தற்போது குமரி மாவட்டத்தில் பப்பாளி பழம் மற்றும் இளநீர் தேவை அதிகமாக உள்ளது. இதனால் பப்பாளி, தென்னை சாகுபடி செய்ய முடிவு செய்தேன். இதற்காக தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கன்னியாகுமரி பழத்தோட்டத்தில் இருந்து ரெட்லேடி ரக பப்பாளி விதைகளை வாங்கி நடவு செய்ய முடிவெடுத்தேன். தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் தாய்லாந்து ரெட்லேடி ரக பப்பாளியை விரும்பி சாப்பிடுகிறார்கள். விவசாயிகளும் இந்த ரகத்தை விரும்பி நடுகிறார்கள். அதனால்தான் எனது தோட்டத்திலும் இந்த ரக பப்பாளியை நடுவதற்கு முடிவு செய்தேன்.எனது தோட்டத்தில் மொத்தம் 300 பப்பாளி மரங்கள் உள்ளன. இந்த பப்பாளி மரங்கள் நட்டு மொத்தம் எட்டு மாதங்கள் ஆகிறது. பப்பாளியை நட்ட 2வது மாதத்தில் பூக்க தொடங்கி விடும். அதற்கடுத்த மாதத்தில் பிஞ்சு, காய் என 5 வது மாதத்தில் முழு பழமாகி விடும். அதற்கடுத்து நாம் அதிலிருந்து அறுவடை செய்யத் தொடங்கலாம். பப்பாளி நடும்போது பெரிய குழிதோண்டி அதில் உலர்ந்த மாட்டு சாணம், அதனுடன் சுடோமோனஸ் போன்ற நுண்ணூட்ட உரங்களை கலந்து போட்டு நடவு செய்தேன். சுடோமோனஸ் போடும்போது இலைசுருட்டு, வேர்அழுகல் போன்ற நோய்கள் வராது. பப்பாளி மரம் சாகுபடி செய்து ஒரு மாதம் கடந்தபிறகு ஒரு பப்பாளி பயிரை சுற்றி 5 கிலோ சாணம், அதனுடன் அரை கிலோ மண்புழு உரம் ஆகியவற்றை போடுவேன். அதன்பிறகு பப்பாளி பயிர்கள் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்ற வகையில் உரங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். இதனுடன் பழக்காடி, தேமோர்கரைசல், மீன் அமிலம் ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறேன். இதில் பழக்காடி, தேமோர்கரைசல் செடிகளில் இருந்து விரைவில் பூக்கள் வருவதற்கும், அந்த பூக்கள் உதிராமல் காய் பிடிப்பதற்கும் பயன் கொடுக்கிறது. மேலும் காற்றில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்களை இந்த கரைசல்கள் எடுத்து பயிர்களுக்கு கொடுத்து வருகிறது. இதனால் பயிர்கள் நல்ல செழிப்புடன் வளர்வதுடன், நல்ல மகசூலும் கொடுத்து வருகிறது. மீன் அமிலம் பூச்சி விரட்டியாக பயன்படுத்தி வருகிறேன். எனது தோட்டத்தில் 300 பப்பாளி மரங்களில் தற்போது 150 மரங்களில் இருந்து காய்கள் பறிக்கப்பட்டு வருகிறது. வாரத்திற்கு சராசரியாக 300 கிலோ பப்பாளி பழங்கள் கிடைத்து வருகிறது. அந்தப் பழங்களை ஆலஞ்சி, குளச்சல், கருங்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் ஒரு கிலோ பப்பாளி பழம் ரூ.25க்கு விற்பனை செய்து வருகிறேன். இதன் மூலம் வாரத்திற்கு ரூ.7500 வருமானம் கிடைக்கிறது. இதில் வேலை, உரம் என செலவு ரூ.2500 வரை ஆகிவிடும். இதனால் மாதத்திற்கு ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. இதில் செலவு போக மீதம் ரூ.20 ஆயிரம் வரை நிற்கும். இதனை தவிர செவ்விளனிக்காக தென்னை சாகுபடி செய்துள்ளேன். மொத்தம் 200 தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் நட்டு 2 வருடங்கள் ஆகிறது. இன்னும் ஒரு வருடத்திற்குள் அனைத்து தென்னைகளும் மகசூல் கொடுக்க தொடங்கும். அதன்பிறகு செவ்விளனி மூலமூம் வருமானம் கிடைக்கும்.

மேலும் எனது தோட்டத்தில் நாவல் மரம், மா மரம் சாகுபடி செய்துள்ளேன். விவசாய பயிர்களுக்கு உரமாக சாணம் தேவைப்படுவதால், சொந்தமாக 2 பசு மாடுகளும், 7 ஆடுகளும் வளர்த்து வருகிறேன். கால்நடைகள் மூலம் கிடைக்கும் சாணத்தை கொண்டு மண்புழு உரமும் தயாரித்து வருகிறேன். இதனை தவிர பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், தேமோர் கரைசல், மீன் அமினோ அமிலம், பழக்காடி ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறேன். ரசாயன உரம் போட்டு சாகுபடி செய்தபோது எனக்கு நஷ்டம் ஆனது. தற்போது இயற்கை விவசாயத்தால் லாபம் கிடைக்க தொடங்கியுள்ளது. இயற்கை விவசாயத்தை செய்வதால், மண் வளம் பெருகுவதுடன், மனத்திற்கு சந்தோஷமாக இருக்கிறது. ரசாயன கலவை இல்லாத உணவை உட்கொள்கிறோம் என்ற மனமகிழ்ச்சி ஒருபுறம் இருக்கிறது. இயற்கை விவசாயத்தை செய்யும்போது முதலில் வருவாய் குறைவாக கிடைக்கும், ஆனால் செல்லசெல்ல வருவாய் அதிகம் கிடைக்கும் என உறுதியோடு பேசி முடித்தார் விவசாயி வில்சன்.
தொடர்புக்கு:
வில்சன்: 93603 62016.

பூச்சி விரட்டி

இயற்கை விவசாயி வில்சன் மேலும் கூறும்போது, நான் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு பூச்சி விரட்டிக்கு கூட ரசாயன உரங்களை பயன்படுத்துவது இல்லை. தென்னை பயிர்களை காண்டாமிருக வண்டு, கூன்வண்டு தாக்குதல் அதிகமாக இருக்கும். இந்த வண்டுகள் தென்னையின் குருத்தை சாப்பிட்டுவிட்டு அதில் முட்டை போட்டுவிட்டு சென்று விடும். பின்பு முட்டையில் இருந்து புழு உற்பத்தியாகி தென்னையை அழித்து விடும். இதனால் வருவாய் இழப்பு அதிகமாக ஏற்படும். தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க பயன்படுத்தும், மருந்தால் நன்மை செய்யும் பூச்சிகளும் மடியும் சூழல் ஏற்படும். இதனால் கடந்த காலங்களில் நாம் முன்னோர் பயன்படுத்தியது போன்று ஆமணக்கு புண்ணாக்கு கரைசலை பக்கெட்டுகளில் தோட்டத்தில் ஆங்காங்கே வைத்துள்ளேன். ஆமணக்கு புண்ணாக்கு கரைசல் வாசனையில் கவரப்படும் காண்டாமிருக வண்டு, கூன்வண்டு உள்ளிட்ட தீமை செய்யும் வண்டுகள், பூச்சிகள் ஆமணக்கு புண்ணாக்கு கரைசலில் வந்து விழுந்து இறந்து விடும் என்றார்.

தேன்பெட்டி

குமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் தேன் பிரசித்தி பெற்றது. மாவட்டத்தில் விவசாய தோட்டங்களுக்கு இடையே பல விவசாயிகள் தேன் பெட்டிகளை சொந்தமாக வைத்து, வியாபாரத்திற்கும், சொந்த தேவைக்கும் தேன் உற்பத்தி செய்து வருகின்றனர். அதனால் விவசாய பயிர்களில் மகரந்த சேர்க்கை அதிகமாக நிகழ்வதுடன், மகசூலும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் விவசாயி வில்சன் அவரது பப்பாளி தோட்டத்தில் 20 தேன் பெட்டிகளை வைத்துள்ளார். இதன் மூலம் எனக்கு தேவையான அளவு தேன் கிடைத்து வருகிறது என்றார்.

மீன் அமிலம்,

பழக்காடி தயாரிக்கும் முறை இயற்கை விவசாயத்தில் மீன் அமிலம் முக்கிய இடத்தை பெறுகிறது. மீன் அமிலம் தயாரிக்க பெரிய பேரலில் 40 கிலோ மீன், 10 கிலோ பப்பாளி, 15 லிட்டர் கரும்புச்சாறு, பேரீச்சம் பழம் 7 கிலோ, 40 கிலோ நாட்டு சர்க்கரை, இதனை தவிர முருங்கை இலை, சப்போட்டா பழம் ஆகியவற்றை போட்டு பேரலை காற்று போகாதவாறு மூடி விட வேண்டும். பின்பு 35 நாட்கள் கடந்த பிறகு அந்த கலவையில் இருந்து மீன் அமிலம் கிடைக்கும். 10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி மீன் அமிலத்தை கலந்து பயிர்களில் அடிக்கலாம். இதனால் பயிர்களை தாக்கும் பூச்சிகளில் இருந்து பயிர்களை காப்பாற்றலாம். அதனுடன் பயிர்களுக்கு தேவையான நுண்ணூட்ட சத்துகளும் கிடைக்கும். இதுபோல் தேமோர்கரைசலை தயாரிக்க 5 லிட்டர் மோரை எடுத்துக் கொள்ள வேண்டும். 3 நாட்கள் கடந்த பிறகு, அதில் 3 லிட்டர் தேங்காய் பால் கலந்து, 21 நாட்கள் கடந்த பிறகு பயிர்களுக்கு நாம் பயன்படுத்தலாம். பழக்காடி தயாரிக்க பப்பாளி 5 கிலோ, பாளையங்கோட்டை பழம் 5 கிலோ, நாட்டு சர்க்கரை 5 கிலோ ஆகியவற்றை கலந்து 7 நாட்களுக்கு பிறகு அந்த கலவையை நாம் பயிர்களுக்கு பயன்படுத்தலாம் என கூறுகிறார் வில்சன்.

 

Related posts

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு