வருசநாடு அருகே பஞ்சம்தாங்கி மலையில் பயங்கர காட்டுத்தீ: பல மணி நேரம் போராடி அணைத்த வனத்துறையினர்

வருசநாடு: வருசநாடு அருகே, பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் நேற்று இரவு பரவிய காட்டுத் தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே, மதுரை மாவட்டத்தை சேர்ந்த சாப்டூர் வனச்சரகத்தில் பஞ்சம்தாங்கி மலைத்தொடர் உள்ளது. இந்த மலைத்தொடரில் நேற்று இரவு காட்டுத்தீ பற்றியது. இந்த மலைத்தொடரின் மற்றொரு பகுதி கண்டமனூர் வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று மாலை பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ மளமளவென பரவியது. அப்போது பலத்த காற்று வீசியதால், கண்டமனூர் வனப்பகுதியிலும் தீ பரவ தொடங்கியது.

இது குறித்து அறிந்த 25க்கும் மேற்பட்ட கண்டமனூர் வனத்துறை ஊழியர்கள், மலைப்பகுதியில் பரவிய காட்டுத் தீயை பலமணி நேரம் போராடி முழுமையாக கட்டுப்படுத்தினர். இதை தொடர்ந்து பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் கண்காணித்து வருகின்றனர். இது குறித்து கண்டமனூர் வனத்துறையினர் கூறுகையில், ‘கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மலைப்பகுதியில் உள்ள புற்கள், செடிகள் சருகு போல காய்ந்து கிடக்கின்றன. இதனால், காட்டுத் தீ பிடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. காட்டுத் தீ பரவலை தடுக்கும் வகையில், வனத்துறையினர் தொடர்ந்து மலைப்பகுதியில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். எளிதில் தீப்பற்றக்கூடிய தீப்பெட்டி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.

Related posts

மனிதாபிமான செயல், மகத்தான சாதனை!!

மகிழ்ச்சியான பள்ளி நாட்களுக்கு மனநல ஆலோசனைகள்!

சென்னையில் பதுங்கி இருந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி கைது..!!