மதுரை வண்டியூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ: ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

மதுரை: மதுரை வண்டியூரை அடுத்த சங்கு நகர் பகுதியில் அப்துல் ஜபார் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் உள்ளது. இங்கு, பழைய பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நேற்றிரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், இன்று காலை பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் தீ மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

மேலும், குடோனுக்கு அருகே இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரிலும் தீ பற்றியதால் சிறிது நேரத்தில் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தல்லாகுளம், அனுப்பானடி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட குடோனுக்கு அருகே மேலும் சில பிளாஸ்டிக் குடோன்கள் உள்ளன. உரிய நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் தீ விபத்து தவிக்கப்பட்டது.
இருப்பினும், தீ விபத்து ஏற்பட்ட குடோனில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்