மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து வந்தது!: தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல்.. மகன்களை கட்டியணைத்து அழுத பிரேமலதா..!!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். திரையுலகில் விஜயகாந்தை போன்ற நல்லவரை பார்க்க முடியாது என திரைத்துறையினர் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல்:

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சிதலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு அலுவலகத்தில் இன்றும் நாளையும் விஜயகாந்த் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தலாம். ‘தர்மம்’ செய்தே மக்கள் மனதில் ‘சிம்மாசனம்’ இட்டு வாழ்பவர் விஜயகாந்த்.

மகன்களை கட்டியணைத்து அழுத பிரேமலதா:

கோயம்பேடு அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்ட நிலையில் பிரேமலதா கதறியழுதார். மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியனை கட்டியணைத்து பிரேமலதா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். கண்ணீரோடு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கலங்கி நிற்கின்றனர்.

மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து வந்த விஜயகாந்த் உடல்:

3 மணி நேரமாக மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து விஜயகாந்த் உடல் கட்சி அலுவலகம் வந்தது. காலை 10.30 மணிக்கு விருகம்பாக்கத்தில் புறப்பட்ட ஊர்வலம் மதியம் 1.25 மணிக்கு கோயம்பேடு வந்தது. சாலையின் இருபுறமும் கண்ணீரோடு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

கோயம்பேட்டில் குவிந்து வரும் தொண்டர்கள்:

விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் சென்னை கோயம்பேடு வருகை தந்துள்ளனர். கோயம்பேடு மேம்பாலம், கட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். காற்றில் கலந்த ‘கருப்பு நிலா’விற்கு திரளானோர் கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் வருகையால் சென்னை கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேமுதிக அலுவலகம் முன்பு குவிந்த தொண்டர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி