வரும் செப்டம்பருக்குள் 1900 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்: சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு தகவல்

சென்னை: இந்தாண்டு செப்டம்பருக்குள் 1900 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று வினா – விடை நேரத்தின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் (திமுக) எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார்.

அசோக்குமார்: பேராவூரணி தொகுதி, திருச்சிற்றம்பலம், அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் சேகர்பாபு: அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது திருப்பணிகள் மேற்கொள்ள மண்டல குழு, மாநில வல்லுநர் குழு அனுமதி பெற்று சுமார் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு பணிகள் இறுதிசெய்யப்பட்டு இன்னும் 15 நாட்களுக்குள் திருப்பணிகள் தொடங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அசோக்குமார்: பேராவூரணி தொகுதியில் உள்ள அருள்மிகு புராதவனேஸ்வரர் பெரியநாயகி அம்மன் திருக்கோயில் காசியை விட திருச்சிற்றம்பலம் சிவனுக்கு வீசம்பங்கு வழிபாடுகளுக்கு பலன்கள் கூட என பாண்டிய மன்னனுக்கு சிவபெருமான் தோன்றி சொன்னதாக வரலாறு உண்டு. இந்த திருக்கோயிலுக்கு திருமணத் தடை நீக்கம், குழந்தை பாக்கியம் வேண்டி மக்கள் ஏராளமாக கூடுகின்றார்கள். எனவே இக்கோயில் திருப்பணிக்கு ரூ.83 லட்சம் வழங்கியதற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொண்டு, இக்கோயிலுக்கு ஒரு திருமண மண்டபம் கட்டித் தரவேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு: திருமண மண்டபங்களை பொறுத்த அளவில் அங்கு பக்தர்களுடைய பயன்பாடு திருமணத்திற்கு ஏற்ற தலங்களாக இருக்கின்ற இடங்களில்,இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 97 திருமண மண்டபங்கள் சுமார் ரூ.350 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உறுப்பினர் கோரிய திருமண மண்டபத்திற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு வேண்டுமெனில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அசோக்குமார் : திருமண மண்டபம் வழங்கப்படும் என்று அறிவித்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, பேராவூரணி பெருமகளூர் பேரூராட்சியில் உள்ள  பாலசுப்பிரமணியன் திருக்கோயிலில் சிதலமடைந்துள்ளது. அதனை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்திடவும், திருவோணம் ஒன்றியம், வெட்டுவாக்கோட்டை சென்னியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் செய்திடவும், திருமண மண்டபம் அளித்திடவும், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பள்ளத்தூர் அருள்மிகு கதலிவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு திருமண மண்டபம், கொடி மரமும் வழங்கிடவும், அதேபோல ஆத்தனூர் வீரமாரியம்மன் கோயிலுக்கு பேராவூரணி சேது ரோட்டில் திருமண மண்டபம் வழங்கிடவும், சிதிலமடைந்துள்ள பேராவூரணி ஒன்றியம் குறிச்சி சிவன் கோயிலை புனரமைத்து குடமுழுக்கு செய்து தர வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு: அருள்மிகு கதலிவனேஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில், அருள்மிகு சென்னியம்மன் திருக்கோயில், குறிச்சி சிவன் திருக்கோயில், அருள்மிகு பால சுப்பிரமணியன் திருக்கோயில் ஆகிய ஐந்து திருக்கோயில்களும் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், குடமுழுக்கு, திருமண மண்டபங்கள் போன்ற பணிகளை எடுத்துக் கொண்டு விரைவாக நிறைவேற்றித் தரப்படும். செப்டம்பர் மாத இறுதிக்குள் 1,900 திருக்கோயில்கள் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட இருக்கின்றது என்பதனை இப்பேரவையில் தெரிவித்து, உறுப்பினர் கூறிய திருக்கோயில்களின் குடமுழுக்கும் வெகு விரைவில் நடத்தி தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!