கோயில் திருவிழாவில் குடித்துவிட்டு தகராறு: பாட்டு கச்சேரி மேடையை சேதப்படுத்தி இருசக்கர வாகனத்துக்கு தீ வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ராஜா நகரில் ராஜகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இணைந்து திருவிழாவை நடத்தியுள்ளனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பத்வா (எ) பத்மநாபனை திருவிழாவுக்கு அழைக்கவில்லை என கூறப்படுகிறது. திருவிழாவையொட்டி நேற்று இரவு பாட்டு கச்சேரி நடைபெற்றுள்ளது. அப்போது, மது போதையில் வந்த பத்மநாபன், அவரது நண்பர்கள் விக்கி, தமிழ்செல்வன் ஆகியோர் திருவிழாவில் தகராறு செய்துள்ளனர். தங்களை அழைக்காமல் எப்படி திருவிழாவை நடத்தலாம் என கூறி, அங்கிருந்த நாற்காலிகளை தூக்கிபோட்டு, விழா மேடையை சேதப்படுத்தினர். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் உடனே வீடுகளுக்கு செல்ல தொடங்கினர்.

அதன்பிறகு, பத்மநாபன் மற்றும் அவரது நண்பர்கள் கோயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுயேட்சை எம்எல்ஏ நேருவின் ஆதரவாளரான ஜோசப் என்பவரது இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருசக்கர வாகனம் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர், பத்மநாபன் தரப்பினர் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மேலும் அசம்பாவித நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மநாபன், விக்கி, தமிழ்ச்செல்வன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related posts

ரூ.26.61 கோடி டெண்டர் ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது வழக்கு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தென்மலையில் குவிந்த கேரள மக்கள்: சுற்றுலாத்துறைக்கு ஒரேநாளில் ரூ.3.17 லட்சம் வருவாய்

60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்: 2025ல் நடத்த திட்டம்