தெலுங்கு கங்கை கால்வாய் மூலம் சென்னைக்கு 1200 கன அடி தண்ணீர்: கண்டலேறு அணையில் இருந்து 30ம் தேதி வரை விநியோகம்

திருமலை: கண்டலேறு அணையில் இருந்து தெலுங்கு கங்கை திட்ட கால்வாய் மூலம் சென்னைக்கு 1200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வரும் 30ம் தேதி வரை வழங்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கண்டலேறு அணையிலிருந்து தமிழ்நாடு மாநிலம் சென்னையின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை திட்ட கால்வாய் மூலமாக வெங்கடகிரி தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணா, தெலுங்கு கங்கை திட்ட முதன்மைப் பொறியாளர் ராமகோபாலுடன் இணைந்து திறந்து வைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் எம்எல்ஏ ராமகிருஷ்ணா கூறியதாவது: என்.டி.ராமராவ் ஆட்சியில் இருந்தபோது வெலுகொண்டா, பிரம்மங்காரு மடம், கண்டலேரு ஆகிய பகுதிகளில் நீர்தேக்கம் கட்டப்பட்டு தெலுங்கு கங்கை கால்வாய் மூலம் 1996-1997 ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொண்டு சென்னைக்கு குடிநீர் வழங்கும் விதமாக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்குவதோடு வெங்கடகிரி, கூடூர், திருப்பதி, ஸ்ரீ காளஹஸ்தி, சத்தியவேடு பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் விதமாக 1200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விரைவில் இதனை 2000 கன அடியாக உயர்த்தப்படும். வரும் 30ம் தேதி வரை தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் வழங்கப்படும். இந்த தண்ணீர் சென்னை பூண்டி ஏரிக்கு செல்கிறது. அடுத்தமாதம் 1ம் தேதி முதல் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரப்பும் விதமாக தண்ணீர் திருப்பி விடப்படும்.

தற்பொழுது கண்டலேறு அணையில் 21 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ஸ்ரீசைலம் அணையிலிருந்து, சோமசீலா அணை வழியாக கண்டலேறுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு 56 டிஎம்சி கொள்ளளவு நிரப்பும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு