கிண்டிக்காரரிடம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டவரை குறி வைத்திருக்கும் தாமரை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கி ண்டிக்காரரிடம் கேள்வி கேட்ட பெற்றோரின் வேலைய காலி செய்ய தாமரை கட்சி துடிக்குதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிண்டிக்காரருக்கு ஏற்பட்ட இன்சல்ட்டை தங்களுக்கு ஏற்பட்டதா நினைக்குதாம் தாமரை கட்சி. இதை மாங்கனி மாவட்டத்து தாமரை நிர்வாகிகள் உறுதிப்படுத்தி இருக்காங்களாம். சமீபத்தில் மாங்கனி மாவட்டத்தின் ஸ்டீல்பிளாண்ட் ஊழியர் ஒருத்தரு, நீட்தேர்வு தொடர்பா கிண்டிக்காரரிடம் நேரடியாக எழுப்பிய கேள்வி தமிழ்நாடு முழுவதும் அதிர்வுகளை உருவாக்கிச்சு. இந்த இன்செல்ட்டால் அவரு செம அப்செட்டாம். இது ஒருபுறமிருக்க, தாமரை கட்சிக்காரங்களோ, இதை தங்களுக்கு ஏற்பட்ட இன்செல்ட்டாகவே நினைக்கிறாங்களாம்.

ஒன்றிய அரசு பணியில் இருந்து கொண்டு அந்த ஊழியர் எப்படி கிண்டிக்காரரிடம் கொஸ்டீன் கேட்கலாம்? உடனடியா அவரை வேலையில் இருந்து விடுவிக்கணும் என்று முஷ்டியை மடக்குறாங்களாம் தாமரையின் தலைகள். இதில் மாங்கனி மாவட்டத்தின் கிழக்கு டிஸ்டிரிக்ட் செகரட்டரி ஒருத்தரு, ஸ்டீல்பிளாண்ட் அதிகாரிக்கு இதை வேண்டுகோளாக வச்சு ரெக்யூஸ்ட் லட்டர் ஒன்றை, தனது லட்டர் பேடில் கொடுத்திருக்காராம். அதேபோல் துறை சார்ந்த ஒன்றிய அமைச்சருக்கும் அந்த லெட்டரை தட்டி விட்டிருக்காராம். எப்படியும் மவுண்டன் தலைவரு அனுமதியில்லாம இந்த ரெக்யூஸ்ட் லெட்டர் ரெடியாக வாய்ப்பில்லை என்பதும் பரவலான பேச்சு.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற சொல்லுக்கு இந்த லெட்டரு புதியபொருளாக மாறி நிக்குதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாநாட்டு விஷயத்தால தேனிக்காரர் டென்ஷன்ல இருக்காராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி சார்பில் நாளை தூங்கா நகரில் மாநாடு நடக்க உள்ளது. இதற்காக சேலத்துக்காரர் தரப்பு பிரமாண்ட விளம்பரங்கள் செய்து வருவதோடு, மாநாட்டில் ஏராளமானோரை திரட்டி தேனிக்காரரோட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க துடிக்கிறதாம். இதற்காக தமிழ்நாடு முழுவதும் கரன்சிகளை வெட்டி ஆட்களை இழுக்கும் பணி ஜரூராக நடக்கிறது. மாநாடு சிறப்பாக நடந்தால், தென்மாவட்டங்களில் தனது இமேஜ் மங்கியதாக தெரிந்து விடும் என்பதால் தேனிக்காரரும் தீவிர யோசனையில் உள்ளார்.

இது ஒருபுறமிருக்க, சேலத்துக்காரர் இட ஒதுக்கீடு விஷயத்தில் துரோகம் செய்ததாக கூறி, அவர் தூங்காநகரத்துக்கு வரக்கூடாது என கண்டன போஸ்டர்கள் தென்மாவட்டமெங்கும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டை கண்டித்து போராட்டம் என மற்றொரு பக்கம் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. மாநாட்டை எதிர்த்தும் வழக்கு போடப்பட்டது. இதனால் அச்சத்தில் இருந்த சேலத்துக்காரர், வழக்கு தள்ளுபடியானதால், கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறாராம். அதேநேரம் மாநாடு நெருங்கும் நேரத்தில் எதிர்ப்புகள் வலுவாக உள்ளதால் கொஞ்சம் கலக்கத்திலும் உள்ளதாகவும், இதனை எப்படி சரிக்கட்டுவது என பெரும் குழப்பத்திலும் உள்ளதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தேனிக்காரரை குஷிப்படுத்தினாலும், எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்ல. ஹனிபீ மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர் சென்று விடக்கூடாது என ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார். இதனால் அவர் டென்ஷனில் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், ஹனிபீ மாவட்டத்தில் இருந்துதான் அதிகம் பேரை திரட்ட வேண்டுமென சேலத்துக்காரரின் முக்கிய கட்டளையாம். இதற்காகவும் பணம் புகுந்து விளையாடுகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வரி வசூலர்கள் கரன்சியில் குளிக்கிறார்களாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சி மண்டலங்களில் பணிபுரியும் வரி வசூலர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவி நகரமைப்பு அலுவலர்கள் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகி இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறனர்.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் உதவி நகரமைப்பு அலுவலர் ஒருவர், எதேச்சதிகாரமா வீடு மற்றும் கடைகளுக்கு விதி மீறல் நோட்டீஸ் கொடுத்து, அதன்மூலம் கரன்சி வசூலிப்பதையே கடமையாக வைத்துள்ளாராம். இவர், தற்போது கிழக்கு மண்டல அலுவலகத்தில் பணிபுரிகிறார். இந்த மண்டலம் இவருக்கு பெரும் ராசியாக இருக்கிறதாம். அதனால், மலைபோல் கரன்சி குவிக்கிறாராம். இவர், கோப்புகளை தொட்டாலே பண மழை பொழிகிறதாம். இவருக்கு மேல்நிலையில் உள்ள அதிகாரிகள், பொறுப்பு அதிகாரிகளாகவே வலம் வருவதால், இவரது வசூல் வேட்டை தடையின்றி தொடர்கிறது. இதேபோல், வரிவசூலர்களும் தட்டி எடுக்கிறார்களாம்.

ஆண் வரி வசூலர்களைவிட பெண் வரி வசூலர்கள், செம கலெக்சன் குவிக்கிறார்களாம். வசூல் குவிக்கும் இந்த ராஜா மற்றும் ராணிகளை கண்டுகொள்வது யார்? மாநகராட்சி கமிஷனர் ‘களை’ எடுக்க வேண்டும் என நியாயமான ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அல்வா மாநகர உளவுப்பிரிவுக்கு நற்சான்று கிடைக்காமல் போனதில் உள்குத்து ஏதும் உண்டா..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாவட்டங்களில் நடக்கும் சுதந்திர தினம், குடியரசு தின கொண்டாட்டங்களின் போது அரசுத் துறைகள், போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நற்சான்று வழங்கப்படுவது வழக்கம்.

அல்வா மாநகரத்தில் உளவுப்பிரிவில் பணியாற்றும் போலீசார் யாருக்கும் இந்த ஆண்டு நற்சான்று இல்லை என கைவிரித்து விட்டார்களாம். சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த போலீசாருக்கும் நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் நற்சான்று வழங்கப்பட்ட நிலையில் உளவுத் தகவல்களை சொல்லும் எங்களுக்கு நற்சான்று கிடையாதா என அந்தப் பிரிவு காக்கிகள் ஆதங்கப்படுகின்றனர். விஷயத்தை விசாரித்த போது, உளவுப்பிரிவு போலீசாருக்கு கடந்த ஆண்டு நற்சான்று வழங்கியதில் கடும் குளறுபடியாம்.

அதாவது ஏற்கெனவே நற்சான்று பெற்ற போலீசார் உயர் அதிகாரிகளை காக்கா பிடித்து மீண்டும் தங்களுக்கே நற்சான்று வாங்கிக் கொண்டார்களாம். இதனால் தான் இந்த வருடம் உளவுப்பிரிவில் யாருக்கும் நற்சான்று கிடையாது என கதவை மூடி விட்டார்களாம். நற்சான்று வழங்குவதில் உளவுத் துறைக்கே இவ்வளவு குழப்பமா. இதற்கு அவர்கள் தான் விடை சொல்லனும்’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு