அல்வா நகரை குறிவைக்கும் குக்கர்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலைக்கட்சி தலைவரின் நிழலானவரை பங்கம் செஞ்ச பேச்சாளர் பத்தி சொல்லுங்களேன்…” என்று ஆர்வமாக ஆரம்பித்தார் பீட்டர் மாமா. ‘‘மம்மியின் பிறந்த தினத்தையொட்டி இலைக்கட்சி தலைவரின் சேலம் புறநகர் மாவட்டத்துல பப்ளிக் மீட்டிங் நடந்திருக்கு. இதுல மாஜி லேடி மந்திரி, தலைமை கழக பேச்சாளர்களுடன் கலந்திருக்கு. இதில் பேசினவங்க எல்லோருமே இலை கட்சி தலைவரின் நிழலானவரை ஆகா ஓகோன்னு புகழ்ந்து பேசியிருக்காங்க. இதனால நிழலானவரு ரொம்பவே ஹேப்பியாகிட்டாராம்.

கூட்டம் முடிய 5 நிமிடம் இருக்கும் நேரத்துல தலைமை கழக பேச்சாளரான கடலூரை சேர்ந்தவரை நன்றி சொல்லும்படி நிழலானவரு கூறியிருக்காரு. கோபத்தின் உச்சிக்கே சென்ற பேச்சாளரு கொந்தளிச்சிட்டாராம். நான் மம்மி காலத்தில் அரசியலுக்கு வந்தவன். பொதுச்செயலாளருக்கு மரியாதை கொடுப்பேன். அவர் சொல்றதை மேடையில் பேசுவேன். ஆனா அவருக்கு நிழலானவரு, இடது, வலது என எதுவாக இருக்கட்டும். பேச்சாளரான எனக்கு மரியாதை கொடுக்கத் தெரியனும். பேசாமல் சம்பளம் வாங்குவது ரொம்பவே அசிங்கம்.

பேசுவதற்கு அழைச்சுட்டு அவமானப்படுத்துவதை ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டு, மாஜி மந்திரிக்கும் ரொம்பவே டோஸ் விட்டிருக்காரு அந்த பேச்சாளர். நீங்கள் எல்லாம் புகழவேண்டிய தலைவரை புகழாமல் யாரையோ புகழுறீங்கன்னு ஆவேசமாக கூறிவிட்டு, தோளில் போட்டிருந்த தூண்டை உதறிட்டு வேகமாக மேடையில இருந்து இறங்கிட்டாராம். பேச்சாளரின் பேச்சை அங்கிருந்த தொண்டர்கள் கை தட்டி ஆரவாரம் பண்ணிட்டாங்களாம். இதுபோல யாரும் என்னை பேசியதில்லையேன்னு அதிர்ச்சியில அப்படியே அமர்ந்திருந்தாராம் நிழலானவரு.

இந்த விவகாரம்தான் இலைக்கட்சி தலைவரின் ஊரில் கட்சிக்காரர்களிடையே இப்போது ஹாட் டாபிக்கா இருக்காம்..’’ என்று விவரித்தார் விக்கியானந்தா. ‘‘நீ…..ண்ட நாட்களுக்கு பிறகு அல்வா நகருக்கு விசிட் அடிச்சிருக்காரே குக்கர்காரர்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஆமா, இவர் தனிக்கட்சி தொடங்கிய போது இலை கட்சிக்கு சவால் விட்டார். அதுவும் அல்வா மாவட்டத்தில் இலை கட்சியை விட குக்கர்காரரின் கை ஓங்கி இருந்தது. அப்போது அடிக்கடி அல்வா மாவட்டத்திற்கு விசிட் அடித்தார்.

ஆனா, கோவில்பட்டி தொகுதியில் நின்று தோல்வி அடைந்ததால், தென் மாவட்ட வருகையை குறைச்சுட்டார். எனினும் மக்களவை தேர்தல் கூட்டணியில் இலை கட்சியை தேட ஆள் இல்லாததால் தனது பழைய பாசத்தில் அல்வா நகரத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் குக்கர்காரர். இங்கு கட்சி சொந்தங்களை கண்டதும் உற்சாகமாகி சேலம்காரரை ஒரு பிடி பிடித்துவிட்டார். சேலம்காரர் பணத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறார். இலை சின்னம் துரோகியின் பிடியில் உள்ளது. அந்தத் துரோகியிடம் இருந்து இலையையும் கட்சியையும் மீட்டெடுப்போம் என்றாராம், அதற்கு கூட்டத்தில் விசில் சத்தம் காதை பிளந்ததாம்.

எப்படியும் மக்களவை தேர்தலில் இலை கட்சிக்கு தென் மாவட்டங்களில் பெரிய மாஸ் இருக்காது. அப்போது எங்களது விசில் சத்தம் தான் ஒலிக்கும் என சவால் விடுகின்றனராம் குக்கர்கட்சியினர். குக்கரின் பேச்சால் தென் மாவட்ட இலை கட்சி வட்டாரமும் சற்று ஆடித்தான் போயிருக்கிறதாம். கூட்டணியும் அமையவில்லை, பேச்சுவார்த்தைக்கும் யாரும் வரவில்லை….இப்படியே போனால் இலை கட்சி எதிர்காலம் என்னாகுமோன்னு அந்தக் கட்சியினர் கவலைப்படுறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பச்சை பேனாவை தொட்டா வேண்டியதை கொடுத்தே ஆகணுமாமே…’’

‘‘வெயிலூர் மாவட்டத்துல உள் ஆட்சி அமைப்புகள்ல, தணிக்கை செய்ற ஆபீஸ் இருக்கு. இங்க தென்நாடு கொண்ட சாமி பெயரை கொண்டவரு பணியாற்றுராரு. இவரு சம்திங் இல்லாம பச்சை பேனாவை தொட மாட்டாராம். தொட்டா கொடுக்க வேண்டியதை கொடுத்தே ஆகணுமாம். சம்திங் இல்லைன்னா? ‘அங்க குறை, இங்க குறைன்னு’ நோட் போட்டு திருப்பி அனுப்பிடுவாராம். சம்திங் வாங்குறதுக்கு ஒரு ஓட்டல் இருக்குதாம். அங்க ஏசி ரூம் போட்டு இருட்டுலத்தான் வாங்குவாராம். யார்கிட்டயும் சிக்கக்கூடாதுன்ற முன்னெச்சரிக்கை தானாம்.

சில அதிகாரிங்க கிட்ட சம்திங் வாங்கிட்டு, அதுக்கு விசுவாசத்தை காட்டலையாம். கேட்டா? கொடுத்த அளவுக்கு இதுபோதும்னு பேசுறாராம். இதனால இவர் சம்திங் வாங்குற ஓட்டல் கேமரா காட்சிகள் எல்லாம் திரட்டி விஜிலென்சுக்கு அனுப்பிட்டாங்களாம். இதனால விஜிலென்சு பார்வை இவர் மேல விழுந்திருக்குதுன்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டெல்டாவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு கிடைக்கும் என கனவில் மாஜி அமைச்சர் இருக்காராமே’’

‘‘தாமரை-இலை கூட்டணி முறிந்ததில் இருந்தே தாமரைக்கு எதிராக மாஜி அமைச்சர்கள் பேசி வந்தனர். ஆனா, டெல்டா மாவட்டத்து மாஜி அமைச்சருங்க மட்டும், அமைதி காத்து வந்தாங்க. தாமரைக்கு எதிராக பேசப் போய் ரெய்டு வந்துடக்கூடாதுங்கிற பயத்தில்தான் மாஜி அமைச்சர்கள் சைலண்டாக இருந்ததா கட்சிக்குள்ளே அவர்களை கிண்டல் அடித்தார்களாம்…. ஆனா, மாஜி அமைச்சர்கள் எதையும் பற்றி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மவுனம் காத்திருக்காங்க.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மனுநீதி சோழன் மாவட்ட மாஜி அமைச்சர் மட்டும் திடீரென ஆக்டிவாக மாறியுள்ளாராம்….இதற்கான முக்கிய காரணம், டெல்டா மாவட்டத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு தனக்கு தான் கிடைக்கும் என்ற கனவில் அவர் இருந்து வருகிறார். டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரை தன்னை விட்டா வேற ஆள் இல்லை என்பதால், தான் கை காண்பிக்க கூடிய ஒருவர் தான் வேட்பாளராக நிற்பார் என எண்ணுகிறாராம்… இதற்காகத்தான் தலைமையிடத்திலும் அதற்காக திரைமறைவில் காய்நகர்த்தி வருகிறார். இதற்காக முதல் கட்ட, 2வது கட்ட நிர்வாகிகளிடம் வழக்கத்தை விட மாஜி அமைச்சர் தனது நெருக்கத்தை காட்டி வருகிறாராம்’’ என்று சொன்னார் விக்கியானந்தா.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு