தெலங்கானா கடன் சுமை ரூ6.71 லட்சம் கோடியாக உயர்வு: மாநில அரசு வெள்ளை அறிக்கை


ஐதராபாத்: தெலங்கான மாநிலத்தின் கடன்சுமை ரூ.6.71 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் அம்மாநில அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் வெளியிட்டுள்ளது. தெலங்கானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் தெலங்கானா சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து விவாதம் நடந்தது. இதில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசும்போது, ‘கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவான போது நிதி நிலைமை மிக நன்றாக இருந்தது. போதிய நிதியுடன் மாநிலம் பிரிக்கப்பட்டது.

ஆனால், தற்போது தெலங்கானா மாநிலத்தின் கடன் சுமை ரூ. 6,71,757 கோடியாக உள்ளது. சந்திரசேகர ராவின் முந்தைய ஆட்சியில் மாநிலமே கடனில் மூழ்கிவிட்டது’ என்றார்.இதையடுத்து துணை முதல்வரான பட்டி விக்ரமார்க்கா, மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்து 42 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டு கூறும்போது, ‘கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த நிதி துஷ்பிரயோகம் குறித்து மக்களுக்கு தெரிய வேண்டும். அதற்காகவே வெள்ளை அறிக்கையை நாங்கள் வெளியிடுகிறோம்’ என்றார். தெலங்கானா மாநிலத்தின் கடன் சுமை ரூ.6,71,757 கோடி. 2014-15-ம் ஆண்டில் மாநில கடன் ரூ.72,658 கோடியாக இருந்தது.

கடந்த பட்ஜெட்டுக்கும், உண்மையான நிதி நிலைக்கும் 20 சதவீதம் வித்தியாசம் உள்ளது. மாநில வருவாயில் 34 சதவீதம் கடனை அடைக்க பயன்படுத்தப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க 35 சதவீதம் செலவிடப்படுகிறது என்று வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்