சந்திரசேகரராவுக்கு தோல்வி பயம்; 80 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சி அமையும்: தெலங்கானா காங். தலைவர் உறுதி

திருமலை: தெலங்கானா சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் வெற்றி பெற்ற ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த்ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 30ம்தேதி ஒரே தேர்தல் கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் நேற்று நிஜமாபாத்தில் உள்ள விஜயபேரி பகுதியில் காங்கிரஸ் பிரசார கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் ரேவந்த்ரெட்டி கலந்துகொண்டு பேசியதாவது: முதல்வர் சந்திரசேகரராவ் தனக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தில் தொடர்ந்து பேசி வருகிறார். பதவி பறிகொடுக்க உள்ள பயம் அவருக்கு அதிகரித்துள்ளது.

இதனால்தான் காங்கிரஸ் கட்சிக்கு 20 இடங்களில் கூட வெற்றி கிடைக்காது என வாய்க்கு வந்தபடி பேசுகிறார். ஆனால் இவர்கள் ஆட்சியில் மாணவர்கள், விவசாயிகள், பெண்கள் அடைந்த சிரமங்கள் ஏராளம். இதனால்தான் மக்கள் மாற்றம் ஏற்படுத்த முன்வந்துவிட்டார்கள். காங்கிரசை ஆட்சி கட்டிலில் அமர வைக்க முடிவு செய்துவிட்டார்கள். முதல்வருக்கு இதே மேடையில் இருந்து நேரடியாக ஒரு சவால் விடுக்கிறேன். இந்த தேர்தலில் 80 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இதில் ஒரு இடம் குறைந்தாலும் கே.சி.ஆர் எந்த தண்டனை அளித்தாலும் அதனை ஏற்க தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்