ஒரேநாளில் 65 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது வெள்ளத்தில் தத்தளிக்கும் தெலங்கானா: 8 பேர் பலி: ஹெலிகாப்டர், படகு மூலம் மீட்பு பணிகள் தீவிரம்

திருமலை: தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் ஒரே நாளில 65 செ.மீ மழை பெய்தது. மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிப்பதால் ஹெலிகாப்டர், படகு மூலம் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழையின் காரணமாக பல இடங்களில் ஏரி, குளம், குட்டைகள் அனைத்தும் நிரம்பியது. கோதாவரி, கிருஷ்ணா நதிகளுக்கு செல்லும் கிளை ஆறுகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. அதிகபட்சமாக முலுகு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 65 செ.மீ மழை பெய்தது. 40 இடங்களில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் வெள்ள நீரால் அடித்து செல்லப்பட்டுள்ளது. மேலும், மழை தொடர்ந்து 2 நாட்கள் பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம், மொரஞ்சப்பள்ளி கிராமத்தில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. இதனால் வீட்டின் மாடிகளில் தஞ்சமடைந்த பொது மக்கள் தங்களை காப்பாற்றும்படி கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் கிராம மக்கள் 200 பேரை பத்திரமாக மீட்டனர். மீட்புப் பணியில் 2 ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 6 தீயணைப்பு துறை படகுகளை கொண்டு கிராம மக்களை மீட்டு தற்காலிக முகாமிற்கு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். இதேபோல் பெத்தப்பள்ளி மாவட்டம், மாந்தனி மண்டலம், கோபால்பூர் மணல் குவாரியில் மணல் எடுக்கும் பணியில் ஈடுப்பட்டுருந்த 10 தொழிலாளர்கள் மானேறு ஆற்றுக்கு மத்தியில் சிக்கி கொண்டனர்.

வெள்ளத்தில் சிக்கிய 10 பேரையும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு குழுவினர் மீட்டனர். அதேபோல், காஜிப்பேட்டை ரெயில்வே சந்திப்பில் தொடர் மழையால் தண்டவாளத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிகிறது. இதனால் அந்த வழித்தடத்தில் சில ரயில்களை மத்திய ரயில்வே துறை தற்காலிகமாக நிறுத்தியது. தெற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் 3 ரயில்களை முழுமையாகவும், 4 ரயில்களை பகுதியளவும் ரத்து செய்துள்ளது. 11 ரயில்களை மாற்றுப்பாதையில் செல்லும் அறிவித்துள்ளது. அதேபோல், ஹனுமகொண்டா மாவட்டம் வேலேறு மண்டலம் கன்னாரம் ஓடையில் வெள்ளநீர் சென்று கொண்டுருந்த நிலையில் அதனை கடந்து செல்ல முயன்று பைக்குடன் மகேந்தர் என்பவர் அடித்து செல்லப்பட்டார். மாநிலம் முழுவதும் மழை வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர்.

Related posts

மனைவியை சரமாரி வெட்டிவிட்டு கணவர் தீக்குளித்து தற்கொலை

ஈடி, ஐடியை அண்ணாமலை ஏவிவிட வேண்டும் எடப்பாடி சிறை சென்றால்தான் அதிமுக ஒருங்கிணையும்: புகழேந்தி ஆவேசம்

நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என கூறும் பாஜ கூட்டணியில் போட்டியிடும் பாமகவை நிராகரிக்க வேண்டும்: விக்கிரவாண்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்