லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாலிபர், சிறுவன் சிக்கினர்

திருவொற்றியூர்: மாதவரத்தில் லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர், சிறுவனை போலீசார் கைது செய்தனர். மாதவரம் பொன்னியம்மன் மேடு, சீனிவாச நகரை சேர்ந்த ரவிச்சந்திரன்(52), போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் மூலக்கடையில் இருந்து ஜி.என்.டி.சாலை வழியாக வீட்டிற்குச் சென்றபோது, வழியில் நின்று கொண்டிருந்த 2 பேர், ரவிச்சந்திரனை நிறுத்தியுள்ளனர்.

பின்னர் போகும் வழியில் தங்களை இறக்கி விடுமாறு கூறியுள்ளனர். இருவரையும் தனது பைக்கில் ரவிச்சந்திரன் ஏற்றிக்கொண்டு வந்தார். சிறிது தூரம் வந்ததும் கீழே இறங்கிக் கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ராமச்சந்திரன் பைக்கை நிறுத்தி உள்ளார். அப்போது, அந்த 2 பேரும், ராமச்சந்திரனின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறிக்க முயன்றனர். உடனே ராமச்சந்திரன் சுதாரித்துக்கொண்டு பைக்கை அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கிற்கு ஓட்டிச் சென்று திருடன், திருடன் என கூச்சலிட்டார்.

அதைக்கேட்டு பெட்ரோல் பங்க் உள்ளே இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே செயின் பறிக்க முயன்ற 2 பேர் தப்பினர். இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர்.

இதில் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆசிப்(23) மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இரவு நேரங்களில் தனியாக பைக்கில் வருபவர்களிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறி செய்வதை இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர் என்று தெரிய வந்தது. பின்னர் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஆசிப்பை புழல் சிறையிலும், சிறுவனை கெல்லிசில் உள்ள சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!