விமானத்தில் புகைபிடித்துரகளை; வாலிபர் கைது

மீனம்பாக்கம்: குவைத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்றிரவு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானத்தில் 184 பயணிகள் பயணித்தனர். சுமார் 38,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்த முகமத் சதாம் (32) என்பவர் சிகரெட் பிடித்தார். சக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை பொருட்படுத்தாமல் புகைத்து கொண்டிருந்தார். உடனே பணிப்பெண்களிடம் புகார் செய்தனர். அவர்களும் எச்சரித்தனர். அப்போதும் கண்டு கொள்ளாமல் புகை பிடித்தார். இதையடுத்து, தலைமை விமானியிடம் விமான பணிப்பெண்கள் புகார் செய்தனர். உடனே அவர், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து இரவு 8.30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது. இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி, முகமது சதாமை பிடித்து விசாரித்தனர். அதற்கு அவர், ‘விமானத்திற்குள் புகை பிடிப்பது எனது விருப்பம். அதை கேட்க நீங்கள் யார்? என கேட்டார். இதையடுத்து அவரை கீழே இறக்கி குடியுரிமை சோதனை, சுங்க சோதனைகளை முடிக்க செய்தனர். பின்னர் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்ததோடு, முறைப்படி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து முகமத் சதாமை கைது செய்தனர்.

Related posts

ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக் கொன்ற 3 பேர் கைது..!!

3வது பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்..!!

திண்டுக்கல் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!!