நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி குலாம் முர்துஷா தெருவில் உள்ள மெரிட் கெஸ்ட் ஹவுஸ் என்ற தனியார் தங்கும் விடுதியில் கடந்த 2012 ஏப்ரல் 10ம் தேதி வெங்கடேஷ் (29) என்பவர் அறை எடுத்து தங்கினார். அவருடன், சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன் (43) என்பவரும் தங்கி இருந்தார். தனியார் ஓட்டலில் பணிபுரியும் இருவரும், அன்றைய தினம் முழுதும் மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் நண்பர் வெங்கடேஷிடம் கடனாக கொடுத்த ரூ.10 ஆயிரத்தை சீனிவாசன் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், வெங்கடேஷ், சீனிவாசனின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பினார். இந்த சம்பவம் குறித்து விடுதி ஊழியர் அளித்த புகாரின்படி கொலை வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார் தலைமறைவான வெங்கடேஷை கைது செய்தனர்.

இந்த வழக்கு 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கு.புவனேஸ்வரி முன் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.மகாராஜன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், கொலை குறித்து போலீசார் கண்டறியாமல் இருக்க, சீனிவாசனின் தலையை மொட்டை அடித்ததோடு, புருவங்களை மழித்து உடலை அறையிலேயே விட்டு விட்டு தப்பியோடி உள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் போதிய சாட்சிகள், ஆதாரங்களுடன் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, வெங்கடேஷூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை கட்ட தவறினால், ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related posts

அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

விசிக கூட்டணியின்றி திமுக வெற்றி பெற முடியாது என்ற ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு ரவிக்குமார் கண்டனம்..!!

மண்டபம் அருகே 200 கிலோ கடல் ஆமை கரை ஒதுங்கியது