தனிக்குடித்தனத்துக்கு கணவர் சம்மதிக்காததால் இளம்பெண் தற்கொலை: வீடியோவை பெற்றோருக்கு அனுப்பினார்


மயிலாடுதுறை: தனிக்குடித்தனத்துக்கு கணவர் சம்மதிக்காததால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தூக்கு கயிறுடன் தான் இருக்கும் வீடியோவை பெற்றோருக்கு அனுப்பி வைத்தார். மயிலாடுதுறை அருகே உள்ள பல்லவராயன்பேட்டை இரட்டைக்குளம் பாத்திமா நகரை சேர்ந்தவர் இப்ராஹிம். இவரது மனைவி தீபா (எ) பாத்திமா(34). இருவரும், கடந்த 2016ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்து மதத்தை சேர்ந்த தீபா முறையாக மதம் மாறி இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு 2 ஆண்டுகளுக்கு பின்பு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இப்ராஹிமின் தந்தை குலாம் மைதீன், தாய் பாத்திமா மற்றும் அண்ணன் அப்துல்லா, அவரது மனைவி ஹாஜிரா ஆகியோர் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அப்துல்லாவும், இப்ராஹிமும் தற்போது துபாயில் வேலை பார்த்து வருகின்றனர்.

இப்ராஹிம் சம்பாதிக்கும் பணத்தை அண்ணனிடமே கொடுத்து வந்துள்ளார். அண்ணணின் கட்டுப்பாட்டிலேயே குடும்பம் இருந்ததால் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்று மனைவி பாத்திமா அவரது கணவரிடம் கூறி வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாத்திமாவை போனில் தொடர்பு கொண்ட அப்துல்லா, தனிக்குடித்தனம் அனுப்ப முடியாது. சேர்ந்து ஒற்றுமையாக வாழலாம். இல்லையென்றால் 2 பிள்ளைகளை விட்டுவிட்டு நீ மட்டும் வெளியே சென்றுவிடு என திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பாத்திமா, இரவு வீட்டு அறையில் தனது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக்கொண்டு, அதை செல்போனில் வீடியோ எடுத்து, தான் இறந்த பிறகு தனது 2 பிள்ளைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்று கூறி அதை பெற்றோருக்கு அனுப்பி விட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், பாத்திமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம்

மகா விஷ்ணுவின் வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யும் பணி தீவிரம்

திமுக பவளவிழா: தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு