சென்னை விமானநிலையத்தில் சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: 9 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இன்று அதிகாலை சிங்கப்பூர் புறப்பட வேண்டிய ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவ்விமானத்தின் கோளாறுகளை சரிசெய்த பிறகு, 9 மணி நேர தாமதமாக இன்று காலை 10.32 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது. சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் இன்று அதிகாலை 1.40 மணியளவில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். அவ்விமானத்தில் பயணம் செய்யவேண்டிய 174 பயணிகளும் நேற்றிரவு 11 மணிக்கு முன்னதாகவே வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்து, விமானத்தில் ஏறுவதற்குத் தயார்நிலையில் காத்திருந்தனர்.

முன்னதாக, சிங்கப்பூர் செல்லும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அங்கிருந்து இரவு 11.40 மணியளவில் சென்னை வந்துவிட்டு, இங்கிருந்து மீண்டும் அதிகாலை 1.40 மணியளவில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்றிரவு சிங்கப்பூரில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் சற்று தாமதமாக நள்ளிரவு 12.21 மணியளவில் சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியது. அப்போது அவ்விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், அவற்றை சரிசெய்த பின்பு மீண்டும் விமானத்தை இயக்கலாம் என்று பணியில் இருந்த விமானி குறிப்பு எழுதி வைத்திருப்பது ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்ய முடியாததால், காலை 5 மணி, 8 மணி மற்றும் 10 மணியளவில் புறப்படும் என தொடர்ச்சியாக அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில், சுமார் எட்டரை மணி நேர தாமதமாக, இன்று காலை 10.25 மணியளவில் சிங்கப்பூர் செல்லும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயணிகளுடன் புறப்பட்டது. எனினும், அந்த விமானம் ஓடுபாதையில் சிறிது நேரம் நின்றதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அந்த விமானம் சுமார் 9 மணி நேரம் தாமதமாக, காலை 10.32 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது. அதுவரை விமானத்தில் செல்வோமா என்ற அச்சத்துடன் 174 பயணிகளும் ஓய்வறையில் பெரும் பரிதவிப்புடன் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கு: ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

உ.பி.யில் போலீஸ் கஸ்டடியில் தாக்கப்பட்ட தலித் சிறுவன் உயிரிழப்பு

பீகாரில் தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்க ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டதாக கார்கே குற்றசாட்டு