ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களது பொறுப்பை சிறப்பாகச் செய்துள்ளதால் இந்திய அளவில் மீண்டும் சென்னை ஐஐடி முதலிடம்: ஐஐடி இயக்குநர் காமகோடி பெருமிதம் 

சென்னை: ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் தங்களது பொறுப்பை சிறப்பாகச் செய்துள்ளதால் இந்திய அளவில் மீண்டும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் என்ஐஆர்எஃப் (NIRF) 2024 தரவரிசையின்படி, ஐஐடி சென்னை, ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 6-வது ஆண்டாகவும், பொறியியல் பிரிவில் தொடர்ந்து 9வது ஆண்டாகவும் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. மத்திய அரசின் என்ஐஆர்எஃப் (NIRF) பட்டியலில் சென்னை ஐஐடி மீண்டும் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

இதுகுறித்து நிரவாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டிலேயே தனது முதன்மையான நிலையை மீண்டும் நிலைநிறுத்தியுள்ள சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்திய அரசின் கல்வி அமைச்சகம் அறிவிக்கும் தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் (NIRF) தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 9வது ஆண்டுக்கான என்ஐஆர்எஃப் இந்தியா தரவரிசை முடிவுகளை டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவித்து பரிசுகளையும் வழங்கினார். இந்தியக் கல்வி வரலாற்றில் இதுவரை கண்டிராத சாதனையாக, ஐஐடி மெட்ராஸ் ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

2016-ல் தரவரிசை வெளியிடத் தொடங்கியது முதல் கடந்த 9 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக பொறியியல் பிரிவிலும் முதலிடத்திலேயே நீடித்து வருகிறது. ஆராய்ச்சி நிறுவனங்கள் பிரிவில் கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த ஐஐடி மெட்ராஸ் தற்போது முதலிடத்திற்கு தரவரிசையில் முன்னேறியுள்ளது.

கண்டுபிடிப்புகள் பிரிவில் கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான கல்வி நிறுவனங்களின் அடல் தரவரிசை என்ற பெயரில் இருந்தது முந்தைய ஆண்டில் இரண்டாம் இடத்திலிருந்து தற்போது முதல் இடத்தை எட்டிப் பிடித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஐஐடி இயக்குனர் கூரியதாவது ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் தங்களது பொறுப்பை சிறப்பாகச் செய்துள்ளதால் இந்திய அளவில் மீண்டும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. கிராமப்புற பகுதிகளுக்கும் முறையான, தரமான கல்வி போய் சேர வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கம். தமிழ்நாடு அரசுடன் இணைந்து பல கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதன் விளைவாக 5000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர் என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லாத பயணம்: இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு

பட்டாசுகளை வீட்டில் பதுக்கியதால் நடந்த வெடிவிபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்