10 ஆண்டுக்கு முன் இறந்த ஆசிரியைக்கு ரூ.7.56 கோடி வருமான வரி நோட்டீஸ்: ம.பி எஸ்பியிடம் குடும்பத்தினர் புகார்

போபால்: கடந்த 10 ஆண்டுக்கு முன் இறந்த ஆசிரியையின் ெபயரில் ரூ. 7.56 கோடி வரிபாக்கி நோட்டீசை வருமான வரித்துறை அனுப்பியது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த உஷா சோனி என்பவரின் ெபயரில் வருமான வரித்துறை ரூ. 7.56 கோடி வரிபாக்கி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் உஷா சோனி இறந்து பத்து ஆண்டுகளுக்கு மேலான நிலையில், அவரது பெயரில் வருமான வரித்துறையிடம் இருந்து வரிபாக்கி நோட்டீஸ் வந்ததால், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக பெத்துல் போலீஸ் எஸ்பி சித்தார்த் சவுத்ரியிடம் அவர்கள் அளித்த புகார் மனுவில், ‘ஆசிரியையாக பணியாற்றிய உஷா சோனி, கடந்த 2013ம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது பெயரில் ரூ.7.56 கோடி வரிபாக்கி நோட்டீசை வருமான வரித்துறை அனுப்பி உள்ளது. அந்த தொகையை செலுத்த எங்களிடம் வசதி கிடையாது. மேலும் உஷா சோனியின் ‘பான்’ எண் விபரங்களை, ‘நேச்சுரல் காஸ்டிங்’ என்ற நிறுவனம் பயன்படுத்தி உள்ளது. அவரது ‘பான்’ எண்ணை சட்டவிரோதமாக பயன்படுத்திய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் உஷா சோனியின் பெயரில் பணப்பரிவர்த்தனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பெத்துல் போலீஸ் எஸ்பி சித்தார்த் சவுத்ரி கூறுகையில், ‘உஷா சோனியின் ‘பான்’ எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து வருமான வரித்துறையிடம் தகவல் கேட்டுள்ளோம். அவர்களிடம் பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related posts

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு

“அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜக ஆட்சி தான்” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு