ரூ.6,902 கோடிக்கு வர்த்தகம் ரூ.1,932 கோடி வரி ஏய்ப்பு: வணிக வரித்துறை நோட்டீசால் முட்டை வியாபாரி ஷாக்

ஓசூர்: ஓசூரில், முட்டை வியாபாரிக்கு, வணிக வரித்துறை மூலம் ரூ.1,932 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜா நடராஜன்(50). இவர், ஓசூர் உழவர் சந்தை சாலையில் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு சென்னை வணிக வரித்துறை அலுவலகத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அதில் சென்னை எழும்பூர் பகுதியில் மகாதேவ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு நீங்கள் உரிமையாளர். இந்த நிறுவனம் பிப்ரவரி 2023ல் ரூ.6,902 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது.

அதற்கான ஜிஎஸ்டி வரி ரூ.1,932 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த முட்டை வியாபாரி ராஜா நடராஜன், சாதாரணமாக எடுத்துக் கொண்டார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் தனது மனைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வேண்டி பதிவு செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக உங்கள் குடும்பத்தினர் பல லட்சம் ரூபாய் வரி கட்டுவதாகவும், தொழில் நிறுவனம் நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அவர் அதிர்ச்சியடைந்து, ஓசூர் பகுதியில் உள்ள வணிக வரித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அதிகாரிகளும் இதுகுறித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ராஜா நடராஜன் கூறுகையில், ‘நான் ஓசூரில் முட்டை வியாபாரம் செய்து வருகிறேன். எனக்கு கம்பெனி எதுவும் இல்லை, வாடகை வீட்டில் வசிக்கிறேன். ஆனால், நான் கம்பெனி நடத்துவதாகவும், அதில் ரூ.6,902 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளதாகவும், வர்த்தகத்திற்கு ரூ.1,932 கோடி ஜிஎஸ்டி வரி வந்துள்ளதாகவும் நோட்டீஸ் வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். தூக்கம் வராமல் தவிக்கிறேன். எனது குடும்பத்தினர் பாதுகாப்புக்காக நான் இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன்’ என்றார்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!