டாஸ்மாக் கடைகளில் 8 மணிநேர வேலை அமல்படுத்த ஷிப்ட் முறை வருகை பதிவேடு: பணியாளர் சங்க செயற்குழு வலியுறுத்தல்

பெரம்பூர்: டாஸ்மாக் கடைகளில் 8 மணி நேர வேலையை அமல்படுத்த ஷிப்ட் முறை வருகை பதிவேடு வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. வடசென்னை மாவட்ட தலைவராக ராமகிருஷ்ணன், செயலாளராக ஹரிதாஸ், பொருளாளராக மதன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து அரசு பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் மருத்துவ திட்டத்திற்கு பதிலாக இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 என இருப்பது போல டாஸ்மாக் பணியாளர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும், டாஸ்மாக் கடைகளுக்கு பீர் வகைகள் குளிர்ச்சியாக விற்பனை செய்ய புதிய குளிர்சாதன பெட்டிகளை தர வேண்டும், 8 மணி நேர வேலையை அமல்படுத்த ஷிப்ட் முறை வருகை பதிவேடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, பொதுச் செயலாளர் தனசேகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி