டாஸ்மாக் பார்களின் உரிமம் நீட்டிப்பு, டெண்டர் விவகாரம் மேல் முறையீடு வழக்கின் மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் பார்களின் உரிமத்தை நீட்டிப்பு மற்றும் டெண்டர் விவகாரம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. டாஸ்மாக் மதுபான கடை அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பது, பார்களை நடத்துவதற்கான உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

தற்போது பார் உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தும் இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் வற்புறுத்துவதாகக் கூறி ஆகஸ்ட் 2ம் தேதி அறிவிப்பாணைக்கு தடை கோரி திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமைதாரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த மனுக்களில், நில உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அந்த இடத்தை மூன்றாம் நபருக்கு வழங்க நிர்ப்பந்திக்க முடியாது. எனவே டெண்டரை ரத்து செய்து, உரிமத்தை நீடித்து தர உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், 8 மாவட்டங்களில் டாஸ்மாக் பார் டெண்டர் குறித்த அறிவிப்பாணைகளை ரத்து செய்து கடந்த 2022 செப்டம்பர் 30ம் தேதி உத்தரவிட்டார். உத்தரவில் புதிய டெண்டர் அறிவிப்பாணையை வெளியிடும் போது, நில உரிமையாளரிடம் என்ஓசி சான்று பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மது விலக்கு கொண்டு வர மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசியல் சட்ட கொள்கைகள் கூறும் நிலையில், மாநில அரசின் சட்டம் மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என்று கருத்து தெரிவித், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Related posts

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி